ஊழல் மோசடிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமி நாதன், அஜித் பீ.பெரேரா ஆகியோரை கொண்ட குழுவொன்றை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நியமித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்ட தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார்.சட்டம் ஒழுங்கு அமைச்சின் நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.
மக்களிடம் இருந்து கடந்த காலங்களில் ஊழல் மோசடி குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை ஊழல் மோசடிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சாகல ரத்நாயக்கவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஊழல் மோசடி தொடர்பான வழக்குகளையும் அதன் விசாரணைகளையும் துரிதப்படுத்துவதற்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன டி.எம்.சுவாமிநாதன் அஜித் பீ.பெரேரா ஆகியோரை கொண்ட குழுவொன்றை ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.குற்றவியல் தொடர்பான பல்கலைக் கழகமொன்றை நிறுவுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழுவொன்றும் நிறுவப்பட்டது. இந்தக் குழுவில் அமைச்சர்களான தலதா அத்துகோரல, சாகல ரத்நாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்வது குறித்து ஆராய்வதற்கு அமைச்சர்களான திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரை கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன்போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு எதிரான பாலியல் துர்நடத்தை தொடர்பிலும் அதற்கான துரித நடவடிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு எதிராகக் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாரினால் மேன்முறையீடு செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.