வெள்ளை கோட்; கழுத்தில் ஸ்டெதஸ்கோப்! சிக்கவைத்த வேடம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வெள்ளை கோட், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் முதுநிலை மருத்துவத் தேர்வு எழுத  மருத்துவர் வேடமிட்டு வந்த பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வடக்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர், ஷகிலா பாபி. இவர், இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். பின்பு, அங்கிருந்த தேர்வு நடைபெறும் அறைக்கு வந்து, தான் முதுநிலை மருத்துவம் படிப்பதாகவும், எனக்கு ஹால்டிக்கெட் வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார். வெள்ளை கோட் மற்றும் கழுத்தில்  ஸ்டெதஸ்கோப்புடன் வந்த அவரைக் கண்டதும், அங்குள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி டீன் உஷா சதாசிவனிடம் அழைத்துச்சென்றனர்.

டீன் உஷா சதாசிவம் அவரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான தகவலை ஷகிலா பாபி கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உஷா சதாசிவம், அருகில் உள்ள செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு போன் செய்தார். உடனே வந்த செங்கல்பட்டு நகர பெண் காவலர்கள், அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. காவல்துறையினரிடமும் முன்னுக்குபின் முரணான பதில் அளித்துவருகிறார். இதனால், அவர் மனநோயால் பதிக்கப்பட்டவராக இருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கிறார்கள். மருத்துவர் வேடமிட்டு வந்த பெண்ணால், செங்கல்பட்டு மருத்துவமனையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.