கோமியம் மருத்துவ குணம் கொண்டதுதானா?

கோமியத்திலிருந்து மருந்துகள் தயாரிப்பதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த மாநிலத்தின் ஆயுர்வேதத் துறை, சமீபத்தில் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகளை அறிமுகம் செய்திருக்கிறது.

யோகி ஆதித்நாத்

“கோமியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் கல்லீரல் நோய், மூட்டுவலி, நோய் எதிர்ப்புசக்திக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். கோமியத்திலிருந்து மேலும் பல மருந்துகளைத் தயாரிக்கவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று உத்தரப்பிரதேச மாநில ஆயுர்வேதத் துறை இயக்குநர் செளத்ரி தெரிவித்திருக்கிறார்.

பசுவின் சிறுநீரை ‘கோமியம்’ என்ற பெயரில் ஒரு புனிதப் பொருளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் `கிருமிநாசினி’ என்பார்கள். பசுவின் கோமியத்தை வீடுகளில் தெளிப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாக, ஹோமங்களில், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது வழக்கம்.

கோமியம்

கடந்த சில மாதங்களாகக் கோமியத்தை பாட்டிலில் அடைத்து ஆன்லைனில் விற்பதும் நடந்துவருகிறது. குறிப்பாக, அமேசான் டாட்காமில் முன்னணி மூலிகை நிறுவனம் ஒன்று, ‘கோமூத்ரா அர்கா’ என்ற பெயரில் கோமியத்தை விற்பனை செய்கிறது.

“உண்மையில், பசுவின் சிறுநீர் குறித்து ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா…  இது மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?’ என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.

” ‘கோமியம்’ என்பது சம்ஸ்கிருதத்தில் பசுவின் மலத்தை, அதாவது சாணத்தைக் குறிக்கும். ‘கோமூத்திரா’ என்பதுதான் பசுவின் சிறுநீரைக் குறிக்கும் வார்த்தை. ஆனால், ‘கோமியம்’ என்றால் பசுவின் சிறுநீர் என்று தவறான பொருளில் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

பசுவின் தலைமுடி தொடங்கி, சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. பசுவின் சிறுநீர் மட்டுமல்ல… வெள்ளாடு, செம்மறியாடு, எருமை, ஒட்டகம், யானை, குதிரை, கழுதை ஆகிய உயிரினங்களின் சிறுநீரிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக  `அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் இருக்கின்றன. அந்த நூலின்,  `கால்-கை வலிப்பு மற்றும் பைத்தியம்’ என்ற அத்தியாயத்தில் (Epilepsy and Insanity Chapter) எழுதப்பட்டிருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்உதாரணமாக, ஆயுர்வேதத்தின்  ‘ஆன்டிடோட்’ (Antidote ) எனப்படும் விஷமுறிவு மருந்தான ‘வில்வாதி குடிகா’ என்னும் அருமருந்து ஆட்டின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கோமூத்ரா ஹர்தகி’ என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. யானையின் சிறுநீர் வெண்புள்ளி நோயைக் குணமாக்க உதவும் மருந்தில் சேர்க்கப்படுகிறது. இப்படிப் பயன்பாட்டில் உள்ள ஏராளமான மருந்துகளைக் குறிப்பிடலாம்.

பசுவின் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின்  சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே `பஞ்சகவ்யம்’ தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும் ((Enema)) பயன்படுத்தப்படுகிறது. எனவே, பசுவின் சிறுநீருக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது உண்மையே.

பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் இருப்பது குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இன்றைய காலத்துக்குப் பொருந்துமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது, பசுவின் நிறத்துக்கேற்பக்கூட அதன் சிறுநீரின் குணாதிசயம் மாறுபடும் என்று ஆயுர்வேதம் கூறியிருக்கிறது.

பசுக்கள்

அந்தக் காலத்தில் நாட்டுமாடுகள் இருந்தன. அவை புல், வைக்கோல் போன்ற தாவர உணவுகளை உட்கொண்டு வளர்ந்தன. ஆனால், தற்போது, செயற்கை, நவீன உணவுகளே மாடுகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றுக்கு அவை தரும் சிறுநீருக்கு  மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா என்பது பரிசோதித்த பிறகே தெரியும்.

சில நேரங்களில் கால்நடைகளுக்குத் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பசுவின் சிறுநீர் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக ஈகோலை (E-COLI) போன்ற நோய்த்தொற்று எதுவும் இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகே மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.

காலை, மாலை நேரங்களில் சேகரிக்கப்படும் பசுவின் சிறுநீரில் மட்டுமே மருத்துவக் குணங்கள் முழுமையாக இருக்கும். அதுவும், முதலில் வரும் சிறுநீரையும், கடைசியாக வரும் சிறுநீரையும் பயன்படுத்தக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வரக்கூடிய சிறுநீரையே பயன்படுத்த வேண்டும். அப்படி சேகரிக்கப்பட்ட சிறுநீரை எட்டு மடிப்புகளாக மடிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் வடிகட்டியே பயன்படுத்த வேண்டும்” என்கிறார் பாலமுருகன்.