ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று நேற்றிரவு வெலிகட பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய, நாவல பகுதியிலுள்ள வோல்டன் குணசேகர மாவத்தையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் பல நாட்களாக நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று வெலிகட பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 8 பேர் அடங்கிய குழுவொன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கடை 4 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் அடிப்படையில் நேற்றிரவு 9.45 மணியளவில் மேல்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைதுசெய்யும் வேளையில், இந்நிலையத்தை நாடாத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் உட்பட நிலையத்தின் முகாமையாளரான ஆண்ணொருவரும் மற்றும் விபாச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 20, 21,22,25,29 மற்றும் 35 வயதுடைய காலி, மாதிரிகிரிய, அம்பிலிபிட்டிய, அனுராதபுரம், கல்கமுவ, பொலன்னறுவை, வெலிமடை மற்றும் நாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் 8 பேரும் இன்று புதுக்கடை 4 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.