காதலிக்க மறுத்த சிறுமியை எரித்த கொடூரம்!!- (வீடியோ)

ஒருதலைக்காதலில் பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நடுவக்கோட்டையை சேர்ந்தவர், சந்தானம். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 23).

திருமங்கலத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிபாண்டி மகள் சித்ராதேவியை கடந்த 6 மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்தார்.

சித்ராதேவி 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பாலமுருகனை மாணவியின் பெற்றோர் எச்சரித்தனர்.

பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால், மாணவியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகும் பாலமுருகன் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் சித்ரா தேவி கடந்த 15-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த பாலமுருகன் திடீரென பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி விட்டார்.

உடல் முழுவதும் வெந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சித்ராதேவி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

75 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற மாணவி சித்ராதேவி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஒரு தலை காதலால் மாணவியின் பின்னால் சுற்றியதாகவும், இதை ஊரார் கண்டித்ததுடன், பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்து, மாணவியை பழி தீர்க்க எண்ணி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கைதான பாலமுருகன் திருமங்கலம் தாலுகா போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

தற்போது மாணவி இறந்து விட்டதால் பாலமுருகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.