“ராத்திரி 12 மணிக்கு மேல.!”- நடுங்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்”

கோவை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

” ‘அவன் எப்படி இருப்பானு யாருக்கும் தெளிவா தெரியலங்க. ஒரு ஆளா இல்லை, ரெண்டு மூணு பேரா’னும் எங்களால கணிக்க முடியல. ஆனால், அந்தச் சேதி வந்ததுல இருந்து எங்களோட தூக்கம் போச்சிங்க. ‘கறுப்புக் கலர் பேன்ட், அதே கலர் சட்டை போட்டுக்கிட்டு, தோள்ல நீளமா… ஒரு பை மாட்டியிருந்தானாம்’. ராத்திரி நேரத்துலதான் அவன் வர்றதா சொல்றாங்க. என்ன ஆகுமோ ஏதாகுமோனு பயமா இருக்குங்க” – கோவையை அடுத்துள்ள வைசியாள் வீதியில் இருக்கும் வி.வி.எம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள்தான் இப்படி அரண்டுபோய் பேசுகிறார்கள். அந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், மருத்துவமனையிலிருந்து மயக்க மருந்துகள் மர்மமான முறையில் காணாமல் போவதாகவும் எழுந்திருக்கும் புகார் அந்தப் பகுதி மக்களைத் திகிலடைய வைத்திருக்கிறது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் பேசினோம், “கோயம்புத்தூர்லயே இந்த ஆஸ்பத்திரிதான் பிரசவத்துக்கு ஃபேமஸ். முன்னாடியெல்லாம், மாசத்துக்கு ஐம்பது பிரசவத்துக்கு மேல இங்கே நடக்கும். பிரைவேட் ஆஸ்பத்திரிங்க அதிகமானதால இப்போ எண்ணிக்கை குறைஞ்சிருச்சி. அப்படியும், கோயம்புத்தூர்ல உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல அதிகப் பிரசவங்கள் நடக்கும் ஆஸ்பத்திரி இதுதான். இங்க பிரசவத்துக்கு வர்றவங்களுக்குப் பெரும்பாலும் சுகப்பிரசவம்தான்” பெருமை தவழ்ந்த ராஜேந்திரனின் குரலும், முகமும் சட்டென இறுக்கமாகிறது. “ஒரு மாசம் இருக்கும் சார், அர்த்தராத்திரியில ஆஸ்பத்திரியிலேயிருந்து ‘திருடன்.. திருட’னு அலறுற சத்தம் கேட்டுச்சு… அக்கம்பக்கத்துல உள்ள  வீடுகள்ல அசந்து தூங்கிக்கிட்டு இருக்கிறவங்களெல்லாம், திடுக்கிட்டு எழுந்திருச்சி என்னமோ ஏதோனு ஓடிவந்து பார்த்தோம். நடுக்கத்தோடு அங்க இருந்த நர்ஸ், ‘அவன் மாடியிலதான் ஒளிஞ்சிருக்கான்… மாடிக்குத்தான் ஓடினா’னு சொன்னாங்க. ஆஸ்பத்திரி ஜன்னல் உடைஞ்சிருந்துச்சி. ஒரு செகண்ட், என்ன நடந்துச்சுன்னே புரியல!

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

ராஜேந்திரன், பரிமளா

பத்துப் பதினைஞ்சுபேர் மாடிக்குப் போய்த் தேடினோம். அங்க யாரையும் காணல. போலீஸுக்குத்  தகவல் சொல்லி அவங்களும் வந்து தேடினாங்க. ஆள் எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான். வந்தது ஒருத்தன் மட்டும்தானா இல்லை, ரெண்டு மூணு பேரானு சரியா தெரியல. நர்ஸ்…ஒரே ஒரு ஆளை மட்டும்தான்  பார்த்துருக்காங்க. அதுவும் அவனோட முகம் சரியா தெரியலைனு சொல்றாங்க. ஆஸ்பத்திரி ஜன்னலை உடைச்சிக்கிட்டு திருடன் உள்ளே நுழையிறானே! கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குள்ள களவாடுறதுக்கு என்ன இருக்குனு எங்க எல்லாருக்கும் ஒரே குழப்பம். நாலைஞ்சு நாள் கழிச்சித்தான் ஆபரேஷனுக்குப் பயன்படுத்துற மயக்க மருந்துகள் காணாமல் போயிருக்குனு தெரியவந்துச்சி. மயக்க மருந்து திருடுறதுக்கா இப்படியெல்லாம் வர்றானுங்கனு எங்களுக்கெல்லாம் தூக்கிவாரிப் போட்டுருச்சி. முதல்ல நாங்க அதை நம்பல. ஆஸ்பத்திரியைச் சுத்தி பார்த்தப்பதான் அதுதான் உண்மை’னு தெரிஞ்சது. காம்பவுன்ட் சுவரை ஒட்டி ஒரு பாழடைஞ்ச வீடு இருக்கு. அதுக்குப் பக்கத்துலயே ஒரு வாட்டர் டேங்க் இருக்கு. மயக்க மருந்தைத் திருடிக்கிட்டுப் போய் இந்த ரெண்டு இடத்துல ஏதாவது ஓர் இடத்துலதான் அவனுங்க போதை ஏத்திக்கிறானுங்க. அதற்கான அறிகுறிகள் நிறைய இருக்கு.  போன வாரமும் வந்திருக்கானுங்க. நைட் டைம்ல ரெண்டே ரெண்டு நர்ஸுங்க மட்டும்தான் இருக்கிறாங்க. அதைத்தவிர பிரசவமான  பொண்ணுங்க பச்சிளம் குழந்தைங்களோட இருக்காங்க. ஏதாவது எடக்குமடக்கா ஆகிப்போச்சுன்னா… அப்புறம் பெரிய சிக்கலாகிப்போயிரும். போலீஸ்காரங்க இந்தப் பிரச்னையோட சீரியஸ் புரிஞ்சிக்கிட்டு மயக்க மருந்து திருடுறதுக்கு வரும் மர்ம மனிதனைக் கண்டுபிடிச்சு கைது செய்யணும். அப்போதான் ஆஸ்பத்திரில உள்ளவங்களுக்கும் நிம்மதி. அருகில குடியிருக்கிறவங்களுக்கும் நிம்மதி” என்றார் விலகாத படபடப்புடன்.

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

போதையில் பதுங்கும் பகுதி…

பெயர் வெளியிட மறுத்துப் பேசிய மருத்துவமனை ஊழியர்கள் சிலர், “ காணாமல் போகும் மயக்க மருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில கிடைக்காது. அதோட பெயரை  எங்களால சொல்ல முடியாது. சொன்னால் பிரச்னை ஆகும். விஷயம் தெரியாதவனெல்லாம் இதை செய்ய முடியாது.  யாரோ நல்ல படிச்சவன், மெடிசனைப் பத்தி நல்லா அறிஞ்சவன்தான் இதை செய்யுறான். அந்த மயக்க மருந்துகளையெல்லாம் இப்போ பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு மாத்திட்டோம். அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழையமுடியாதபடி ஜன்னல்களை கம்பிபோட்டு அடைச்சிருக்கோம். ஆனாலும், பலநாள்  ராத்திரி 12 மணிக்கு மேல அவனுங்க சத்தம் மாடிமேல கேட்டுகிட்டுதான் இருக்கு. நைட் டியூட்டில ரெண்டே ரெண்டு நர்ஸுங்கதான் இருக்கோம். மாடி ஏறி மேலேபோய் பார்க்கவும் எங்களுக்கு பயமா இருக்கு. உள்ளுக்குள்ள இருக்கவும் பயமா இருக்கு. ஒவ்வொரு ராத்திரி விடியுறதுக்குள்ள உசுருபோய் உசுரு வந்துருது. போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை விசிட் பண்றாங்க. ஆனாலும், எங்களுக்கு அச்சமாகவே இருக்கிறது. அப்படி வர்றவங்களை கண்டுபுடிச்சி கைது செய்யணும் என்கிறார்கள்.

அடுத்ததாகப் பேசிய பரிமளா என்கிற பெண், “தெருவுக்குத் தெரு சாராயக் கடைங்க இருக்கு. அந்த போதை பத்தலைன்னு இப்போ இப்படியெல்லாம் இறங்கிட்டானுங்க என்று தலையில் அடித்துக்கொண்டவர் அந்த போதைக்காரவனுங்களால ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வர்றதுக்கே எல்லாரும் பயப்படுறாங்க. பெண்கள் மட்டுமே இருக்கிற ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு ஒரு வாட்ச் மேன் கூட போடாம வெச்சிருக்காங்க என்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிக்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்,” பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனை தரப்பிலிருந்து வாய்மொழி புகார் கொடுத்துள்ளார்கள். அப்போதிலிருந்து பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறோம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவமனையை கண்காணித்துக் கொள்ள தனியாக ஒரு போலீஸ் போட்டிருக்கிறோம். யாரும் அத்துமீறி உள்ளே நுழையாதபடி வழிகளையெல்லாம் அடைத்துள்ளோம். இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.