51 ஆண்டுகால திரை வாழ்வில் காதல் இளவரசியாக, சிறந்த நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் திரைக்கு பின்னால் உள்ள நிஜ காதல் மற்றும் திருமணம் எப்படிப்பட்டது?
ஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்ற இறக்கம் கொண்டதே. ஸ்ரீதேவி திரையில் உச்ச நட்சத்திரமாக இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் போனி கபூரை சந்தித்தார்.
தனது திரைப்படத்தில் கனவுக்கன்னி ஸ்ரீதேவி நடிக்க வேண்டுமானால் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகளை தயாரிப்பாளர்களும், கதாசிரியர்களும் உருவாக்கிக் கொண்டிருக்க, திரைக்கு பின்னால் உண்மையான காதல் அனுபவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார் அவர்.
90களில், திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை ஸ்ரீதேவி மணந்தார். ஸ்ரீதேவியின் கண்ணசைவுக்காக இளைஞர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்க, ஏற்கனவே திருமணமான போனி கபூரே திரையின் உச்ச நட்சத்திரத்தின் தேர்வாக இருந்தார்.
இந்த காதல் தம்பதிகளின் காதல் விடலைப் பருவ காதல் அல்ல. இருவரும் உலகம் அறிந்தவர்கள், பொறுப்புணர்ந்தவர்கள். 80களில் இவர்களின் காதல் கதை தொடங்கியது.
மிஸ்டர் இண்டியா’
மூத்த திரைப்பட பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான ஜெய்பிரகாஷ் சௌக்ஸேயுடன், பிபிசியுடன் இணைந்து பணிபுரியும் சுப்பிரியா சோக்லே பேசினார்:
“மிஸ்டர் இந்தியா திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தபோது, கதாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஸ்ரீதேவியிடம் பேசுவதற்காக சென்னைக்கு சென்றனர்” என்று சொல்கிறார் அவர்.
“தொலைபேசியில் பேசிய ஸ்ரீதேவியின் தாயார், மகள் பல படங்களில் நடிப்பதால் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். அந்த நேரத்தில் மிகவும் பிஸியாக இருந்த ஸ்ரீதேவியிடம் இருந்து 3-4 நாட்களுக்கு போன் வரவில்லை.”
“இருவருக்கும் கவலை ஏற்பட்டாலும், போனி கபூருக்கு ஆழ்ந்த கவலை ஏற்பட்டது. ஏனெனில் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டிருந்த அவர், கதாநாயகியாக நடிக்க ஸ்ரீதேவியே பொருத்தமானவர் என்று உறுதியாக நம்பினார்.”
“தினமும் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நடையாய் நடந்தார் போனி கபூர். பத்து நாட்களுக்கு பிறகே அவரால் ஸ்ரீதேவியை சந்திக்க முடிந்தது. கதையை கேட்ட ஸ்ரீதேவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். “
போனியின் காதல்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ’இந்தியா டுடே’ ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்ச்சியில், போனி கபூர் தனது காதல் கதையைப் பற்றி இவ்வாறு கூறினார்: “ஸ்ரீதேவியை நான் முதன்முதலில் திரையில் பார்த்ததுமே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.”
“70 களில் தமிழ் திரைப்படத்தில் அவரை முதன்முதலாக பார்த்தேன், படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக சென்னைக்கு சென்றேன்.”
“ஆனால் அப்போது அவர் சென்னையில் இல்லை, பின்னர் அவரை ‘சோல்வா சாவன்’யில் பார்த்தேன். அவரின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது, பிறகு அவரை ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தேன்.”
“அப்போது ஸ்ரீதேவியின் தாயே அனைத்து முடிவுகளையும் எடுப்பார். ஸ்ரீதேவியின் சம்பளம் மிகவும் அதிகம்தான்.”
“திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளம் என்று அவர் அம்மா சொன்னார், என் முடிவில் இருந்து பின்வாங்கச் செய்வதற்காக அவர் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் 11 லட்சம் தருவதாக சொன்னேன்.”
“ஸ்ரீதேவியின் தாய் என்னுடன் நட்பாக பழகினார். அருமையான அலங்கார அறை, சிறந்த ஆடைகள் என ஸ்ரீதேவிக்கு தேவையான அனைத்தையும் படப்பிடிப்பு தளத்தில் தயாராக வைத்திருப்பேன். உண்மையில் நான் அவரை காதலித்தேன்.”
“அந்த சமயத்தில் சாந்தினி என்ற திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். ஏதாவது காரணத்திற்காக படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சுவிட்சர்லாந்துக்கு ஸ்ரீதேவியை சந்திக்க சென்றுவிடுவேன். இப்படித்தான் என் காதல் கதை தொடங்கியது.”
“அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நான் கூடவே இருப்பேன் என்று அவருக்கு உணர்த்த விரும்பினேன். காலப்போக்கில் என்னுடைய காதலை ஸ்ரீதேவி புரிந்துக் கொண்டார்..”
ஸ்ரீதேவியின் தாய்க்கு வந்த நோய்
ஸ்ரீதேவியின் தாயாருக்கு நோய் ஏற்பட்டது முதல் அவர் இறக்கும் காலகட்டமே போனி கபூருடன் ஸ்ரீதேவிக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது.
ஜெய்பிரகாஷ் செளக்ஸே இவ்வாறு கூறுகிறார், “ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தவுடன், போனி உடனே சென்னைக்கு விரைந்தார்.”
“மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்கு உறுதுணையாக இருந்தது போனி கபூர்தான்.
“ஸ்ரீதேவியின் தாய்க்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்ரீதேவி வழக்கு தொடுத்தபோது 16 கோடி ரூபாய் இழப்பீடு கிடைத்தது.”
“அந்த சிக்கலான நடைமுறைகள் முழுவதிலும் போனி கபூர்தான் ஸ்ரீதேவிக்கு உதவி செய்தார். தனது தாய்க்கு போனி கபூர் செய்த பணிவிடைகளை பார்த்து ஸ்ரீதேவியின் மனம் காதலில் விழுந்தது.”
“ஸ்ரீதேவியின் தாய்க்கு முன்னரே தந்தை இறந்து விட்ட நிலையில், தாய்க்கு பிறகு தனி மரமாக நின்றார்.”
“அப்போது மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதேவிக்கு ஆறுதல் சொல்லி, அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது போனி கபூர். இப்படித்தான் இருவரும் காதலில் பிணைந்தனர்.”
தெற்கில் இருந்து உதித்த நட்சத்திரம்…
மிஸ்டர் இண்டியா, ரூப் கி ராணி-சோரோ கா ராஜா, மாம் போன்ற போனி கபூரின் திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்தார்.
இருவரிடையே காதல் ஆழமாக இருந்தாலும், அவர்கள் இருவரும் வாழ்க்கை துணைவர்களாவது அவ்வளவு ஒன்றும் எளிதானதாக இல்லை. போனி கபூர் ஏற்கனவே திருமணமானவர், இரண்டு குழந்தைகளின் தந்தை.
எனவே இருவருக்கும் இடையே திருமணம் நடைபெறாது என்றே அனைவரும் கருதினார்கள். ஆனால் இருவரும் 90களில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரின் குடும்ப பின்னணியும் மாறுபட்டவையே. ஸ்ரீதேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். போனி கபூரோ பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இருவரின் கலாசாரம், பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை.
“திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதேவி, பஞ்சாபிகளின் நடைமுறைகளை கற்றுத் தேர்ந்தார், அவர்களின் பழக்க வழக்கங்களையே கடைபிடித்தார். கணவன் வீட்டாருக்கு ஏற்றாற் போல தன்னை தகவமைத்துக் கொண்டார்.”என்கிறார் ஜெய்பிரகாஷ் செளக்ஸே.
“தனது குடும்ப பழக்க வழக்கத்தையோ, கலாசாரத்தையோ கடைபிடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி ஒருபோதும் கணவரிடம் வற்புறுத்தியதில்லை.”
“ஸ்ரீதேவி-போனி கபூர் குடும்பம் என்றால், அது கபூர் கூட்டு குடும்பம். தனது கணவர்களின் உடன்பிறந்தவர்களுடன் இணக்கமாகவே வாழ்ந்தார் ஸ்ரீதேவி.”
“தனது மாமனார் சுரிந்தர் கபூரின் 75வது பிறந்த நாளின்போது, சென்னையில் மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் ஸ்ரீதேவி. தனது சென்னை பங்களாவில் பெரிய அளவிலான பூசைகள் மற்றும் யாகங்களை நடத்தினார். ஆடம்பரமான விருந்துக்கும் ஏற்பாடு செய்தார். “
“அந்த விருந்தில் கலந்து கொண்ட கமல் ஹாசன் மற்றும் விருந்தினர்களுக்கு தின்பண்டங்களை எடுத்துக் கொடுத்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் இருவரும் ஸ்ரீதேவியின் மீது மிக்க மரியாதையும், பாசமும் கொண்டவர்கள்.” என்கிறார் ஜெய்பிரகாஷ் செளக்ஸே.
தனது ஆரோக்கியம், உடல்நலம், அழகு பற்றி அதிக அக்கறை கொண்ட ஸ்ரீதேவி, போனி கபூர் தனது உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை என்ற விடயத்தில் மட்டும்தான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.