ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது – நாளை இறுதிச்சடங்குகள்- (வீடியோ)

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது. நாளை இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி, ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக்கடிதம் அளித்தது. அனுமதிக்கடிதம் அளித்த பின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்வதற்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சில மணிநேரத்திற்கு பின்னர் எம்பால்மிங் நடவடிக்கைகள் முடிந்ததும் துபாய் விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

அனில் அம்பானிக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு புறப்பட்டது.

இந்நிலையில், சுமார் 9.45 மணியளவில் அவரது உடல் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து நேராக இறுதிச்சடங்குகள் நடக்கும் மேற்கு அந்தேரி மும்பை மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள லோகந்வாலா வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஸ்ரீதேவியின் உடலுக்கு பிரமுகர்களும், பொதுமக்களும் நாளை காலை 9.30 மணியிலிருந்து 12.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என போனி கபூர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின்னர் சுமார் 2 மணியளவில் செலப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் இருந்து ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

விலே பார்லே சேவா சமாஜ் இந்து மயானத்தில் அவரது உடல் நாளை மாலை 3.30 மணியளவில் தகனம் செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.