“ஆன்-லைனுக்கு படம் விற்பனை” – தியேட்டர் உரிமையாளர் கைது

இணையதளத்தின் ஆதிக்கம் ஒட்டுமொத்த உலகத்தையும் விரல் நுனியில் கொண்டு வந்துவிட்டது. அந்த அளவிற்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. தொழில் நுட்பத்தின் இந்த வளர்ச்சி மக்களுக்கு எந்த அளவிற்குப் பயன் அளிக்கின்றதோ.. அதே அளவிற்குத் தீமையும் அளித்து வருகின்றது. குறிப்பாகச் சினிமா உலகம் திருட்டு விசிடி-க்கு பயந்த காலம் போய் இன்று இணையதளங்களால் பெரும் பாதிப்பு அடைந்து வருவதாக திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் கதறுகின்றனர்.

முருகன் தியேட்டர் உரிமையாளர் கைது

கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மனுசனா நீ என்ற தமிழ் படத்தை ஆன்-லைனுக்கு விற்பனை செய்த கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகனை அறிவு சார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

முருகன் தியேட்டர்

‘மனுசனா நீ’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான கஜாலி அவர்களிடம் பேசினோம். ‘ஆயிரம் ஆயிரம் கனவுகளோடுதான் சினிமாத்துறைக்கு வருகிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவுதான் அறிவு, திறமை இருந்தாலும் தொழில்நுட்பம் என்ற ஆயுதத்தால் சினிமாத்துறையை சீர்அழித்து விடுகின்றனர். மனுசனா நீ திரைப்படம் மருத்துவத்துறை சார்ந்த சமூகத்திற்கு பல நல்ல தகவல்களை சொல்லும் படமாக எடுத்துக் கடந்த பிப்ரவரி 16ந் தேதி வெளியிட்டோம். படத்தைப் பார்த்த பொதுமக்களும் நண்பர்களும் வெகுவாக பாராட்டி பேசினார்கள். ஆனால் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் மட்டும் படம் போட்ட ஒரே நாளில் தியேட்டருக்கு யாரும் வரவில்லை என்று படத்தை எடுத்துவிட்டனர்.

பறிமுதல்

பிப்ரவரி 18ந் தேதி இணையதளங்களைப் பார்த்த எங்கள் குழுவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், தமிழ் கன், தமிழ் கூல் போன்ற இணையதளங்களில் மனுசனா நீ படம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் எங்களுக்கு 3 கோடி ரூபாய் அளவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதை சும்மா விடக் கூடாது என்று படத்தின் பிரிட் எந்தத் தியேட்டரில் எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்று எங்கள் குழு விசாரணையில் இறங்கியது, படத்தின் பிரிட் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் ரிலீஸ் ஆன அன்றே இரவு 7.05 முதல் 8.57 வரை தியேட்டரை மூடிவிட்டுப் படத்தை பிரிட் பதிவு செய்துள்ளனர். முழுமையான விவரங்களைச் சேகரித்து கொண்டு அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு சைபர் க்ரைமில் புகார் கொடுத்தோம் என்று தெரிவித்தார்.

எச்சரிக்கும் ஆய்வாளர் தாரணி

அதன் பிறகு பிப்ரவரி 27ந் தேதி மாலை 5 மணிக்கு அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் ஆய்வாளர் தாரணி தலைமையில் கிருஷ்ணகிரி வந்து இறங்கி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் தியேட்டர் ஆப்ரேட்டர் துரையைக் கைது செய்ததுடன் தியேட்டர் சர்வர் மற்றும் புரஜெக்டர் பறிமுதல் செய்தனர்.