நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர் குளியலறையில் இருக்கும் பாத்டப்பில் தவறி விழுந்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் இறந்ததாகவும் கூறப்படும்நிலையில் மரணத்திற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லாததால் வழக்கமான நடைமுறையையே துபாய் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் இதில் திருப்தியில்லாத துபாயைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமணம் முடிந்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் மூத்த மகள் ஜான்வி கபூர் இருவரும் மும்பை திரும்பிவிட்டனர். ஸ்ரீதேவியும் தனது இரண்டாவது மகளும் துபாயில் தங்கிவிட்டனர்.
மீண்டும் துபாய் போன போனி கபூர்
ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று கூறி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் ஹோட்டலில் ஸ்ரீதேவி தங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் அளிப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை துபாய் சென்றார்.
கதவை உடைத்த போனி கபூர்
இருவரும் தங்களது அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஸ்ரீ தேவி குளியலறைக்குள் சென்றுள்ளார். 15 மிநிடங்கள் ஆகியும் வெளியே வராததால், கதவை அவரது கணவர் போனி கபூர் தட்டியுள்ளார். அப்போதும், கதவு திறக்காததால், அவரது நண்பரை அழைத்து கதவை உடைத்து திறந்துள்ளனர்.
பாத்டப்பில் தவறி விழுந்து
அப்போது ஸ்ரீ தேவி பாத் டப்பில் எந்த உணர்வும் இல்லாமல் கிடந்துள்ளார். மாரடைப்பில் அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. தடவியல் சோதனைகளுக்குப் பிறகு நேற்று மாலை வெளியான அறிக்கைகளில் அவர் பாத் டப்பில் தவறி விழுந்ததாக கூறப்பட்டது.
வழக்கமான நடைமுறை
அப்போது ரத்த மாதிரிகளில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மதுபோதையில் இறந்ததாக கூறப்படும் நிலையில் மரணத்திற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லாததால் வழக்கமான நடைமுறையையே துபாய் நிர்வாகம் செய்து வருகிறது.
சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும்
இதில் பொது விசாரணைக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதாம். இந்நிலையில் இந்த அறிக்கைகளில் திருப்தியில்லாத வழக்கறிஞர் ஒருவர், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.