மட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்துவயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் சிறுமியின் சாதுரியமான செயற்பாட்டினால் கடத்தல்காரனின் பிடியிலிருந்து தப்பித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிற்காக ஒத்திகை பார்த்து விட்டு நண்பிகளுடன் மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.குறித்த சிறுமி தனது வீட்டுக்குச் செல்லும் பாதையினால் தனிமையில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அச் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வழிமறித்து அப் பிள்ளையின் தந்தையார் ஏற்றிவரச்சொன்னதாக கூறி சிறுமியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேகமாக பயணித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுமி பயத்தில் கத்திக்கொண்டே இருந்துள்ளார். சனநடமாட்டம் குறைந்த வீதியினூடாக சிறுமியை ஏற்றிச் சென்ற நபர் களுதாவளையிலுள்ள குளக்கட்டு நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள ஆட்கள் ஆரவாரமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது மற்றொரு நபருக்கு தொலைபேசி அலைப்பினை எடுத்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தினை தனது புத்திசாதுரியத்தினால் சரியாக பயன்படுத்திக்கொண்ட சிறுமி அவ்விடத்தில் இருந்து சத்தமிட்டு கத்தியவாறு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் நோக்கி ஓடியுள்ளார். அவ்வேளையில் ஆலயத்தின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் தெய்வாதீனமாக கத்திக்கொண்டு வந்த சிறுமியைக் கண்டுள்ளதுடன். அச்சிறுமியை மீட்டு நடந்ததைக்கேட்டுள்ளனர்.
சிறுமி தப்பியோடியதை சற்றும் எதிர்பார்க்காத மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியள்ளது. குறித்த நபர் எதற்காக சிறுமியை கடத்தினார்.அவர் எங்கிருந்து வந்தர் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும்.
ஆட்கள் நடமாட்டமற்ற வீதிகளில் பயணிப்பதை தவிர்ப்பதற்காகன ஆலோசணைகளை வழங்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.