தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்’, பிரகாஷ்ராஜ் இந்தியில் இயக்கும் `தட்கா’ (`உன் சமையல் அறையில்’ படத்தின் இந்தி ரீமேக்) ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார் அவரது தாயார் நீர்ஜா.
ஆனால், தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி எனக் கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்கப்பட்ட போது, “என்னுடைய வாழ்க்கை சுவாரஸ்யமான கதைகள் அடங்கியது.
அதில் எனது திரைப் பயணம் பற்றி மட்டும் பேசலாம். எனது பர்சனல் வாழ்க்கை குறித்து வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.
ஆனாலும் இவருக்கும் இவரது காதலரும், ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரருமான ஆண்ட்ரே கோஷிக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பது உறுதி என சொல்லப்படுகிறது.
இந்த திருமண நிகழ்வு இந்து முறைப்படி மார்ச் 17, 18 மற்றும் 19 என மூன்று தினங்கள் உதய்பூரில் நடைபெற உள்ளதாம்.