`நேரலையில் வார்த்தைப் போரில் ஈடுபட்ட செய்தி வாசிப்பாளர்கள்!’

செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள் இருவர், வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

 

லாகூரிலிருந்து செயல்படும் சிட்டி 42 என்ற செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆண் மற்றும்  பெண் செய்தி வாசிப்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த 30 விநாடி வீடியோ, ` என்னிடம் எதுவும் பேச வேண்டாம். இவருடன் நான் எப்படி செய்தி வாசிக்க முடியும்’ என அந்த ஆண் செய்தி வாசிப்பாளர், பெண் செய்தி வாசிப்பாளரைக் குறிப்பிட்டு தயாரிப்புக் குழுவிடம் உருது மொழியில் குறைகூறுவது போல தொடங்குகிறது. அதற்கு, `நான், நீங்கள் பேசும் முறையைக் குறிப்பிட்டேன். மரியாதை கொடுத்துப் பேசுங்கள்’ என்று அந்த பெண் செய்தி வாசிப்பாளர் பதிலளிக்கிறார். ’நான் எப்படி உங்களை மரியாதைக் குறைவாக நடத்தினேன்’ என்று ஆண் செய்தி வாசிப்பாளர் கேட்க, ‘மரியாதை தெரியாதவர்’ என்று அந்தப் பெண் முணுமுணுக்கிறார். கோபத்தில், ‘அவரை வார்த்தையை அளந்து பேசச் சொல்லுங்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் வீடியோ பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறாதா’ என்று அந்த ஆண் செய்தி வாசிப்பாளர் கூறியதுடன், அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவிவருகிறது.