76 வயது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. அவரைப் பார்க்க 97 வயதான அவரது அம்மா வருகிறார். இளைமையாக இருக்கும் போது உடல்நலக் குறைபாடு என்றாலே நம்மால் தாங்க இயலாமல் அப்படியே வதங்கிப் போய் வீட்டில் கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறிக் கொண்டு இருப்போம்.
உடல்நிலை சரியானால் தான் குணநலமும் சீராகும் என்ற நிலை தான் பலருக்கு. உடல் உபாதைகள் அத்தனை படுத்தி எடுக்கும். ஒருவழியாக உடல் உபாதைகள் விடைபெற்றால் மட்டுமே மனதளவில் சாந்தம் கிடைக்கும் நமக்கு மட்டுமல்ல வீட்டிலுள்ள நம்மைச் சார்ந்தோர் அத்தனை பேருக்கும் தான்.
அப்படி இருக்க இந்தப் பாட்டிக்கு 76 வயதில் ஏதோ உடல்நலக் கோளாறு. நடமாட்டமில்லாமல் உண்பதும், உறங்குவதும் படுக்கையிலேயே எனும் நிலையாகி விட்டது போலும்.
வீட்டில் அவரைக் கவனித்துக் கொள்ள பிள்ளைகள், கணவர், பேரன், பேத்திகள் என பல உறவுகள் இருக்கலாம். ஆனால் உள்ளூர அவரது மனம் நாடியிருந்தது அவரது அம்மாவின் வருகையை மட்டுமே.
76 வயதான தனக்கே உடல் உபாதைகள் இப்படிப் படுத்தி எடுக்கும் போது 97 வயதான தனது அம்மாவால் எப்படித் தன்னை வந்து காண முடியப் போகிறது? அம்மாவெல்லாம் இங்கே வரமாட்டார் என்ற ஏக்கத்தில் இருந்திருப்பார் போலும்…
ஆனால், சர்ப்ரைஸாக அவரது வயோதிக அம்மா தன் மகளைப் பார்க்க ஓடோடி வந்தே விட்டார் எனும் போது அம்மாவைக் கண்டதும் அவரது உணர்வு வெளிப்பாட்டைப் பாருங்கள்…
ம்மா… என்ற அவரது அழைப்பில் ஓராயிரம் அர்த்தங்கள்…
உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே முதல் உறவு. பிறகு தான் மற்றவர்களைப் பட்டியலிட முடியும்.
இந்த நெகிழ்வான வீடியோ முகநூலில் பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருந்தது. எத்தனை முறை பகிர்ந்தாலும் பகிரத் தகுதியான வீடியோ தான் இது!