தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு 13.8.1963-ஆம் திகதி மகளாகப் பிறந்தவர் ஸ்ரீதேவி. இவரது உடன் பிறந்த சகோதரி லதா.
பிரபல திரைப்பட நடிகையான பின்பு சென்னையில் வசித்து வந்த அவர், அதன் பின் மும்பையில் செட்டிலாகிவிட்டார். கடந்த 24-ஆம் திகதி மரணமடைந்த ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
இந்நிலையில் மீனம்பட்டியில் இருக்கும் ஸ்ரீதேவியின் பூர்விக வீடு எப்படி உள்ளது என்பதைப் பற்றி பிரபல தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், மீனம்பட்டியில் தான் ஸ்ரீதேவியின் பூர்விக ஊர் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடு சிதிலடைந்ததால், சமீபத்தில் தான் மராமத்து வேலை செய்து புதுப்பித்துள்ளனர்.
இந்த வீட்டின் வரவேற்பே மிக அற்புதமாக உள்ளது. அதாவது வரவேற்கும் ஊஞ்சல், அதன் பின் படுக்கையறை, சமையலறை என மொத்தம் நான்கு அறைகள் உள்ளன.
இதில் நுழைவு வாசலை ஒட்டியுள்ள அறையின் முன்பு ஸ்ரீதேவி தாய் மற்றும் தந்தையுடனும், தனியாகவும் உள்ள சிறுவயது புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வரவேற்பு அறைக்கு சென்றால் அங்கே ஸ்ரீதேவியின் அப்பாவிற்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் பிறந்த மகன்களின் சிறுவயது புகைப்படமும், ஸ்ரீதேவியின் பெரியப்பா ராமசாமி மற்றும் உறவினர்களின் புகைப்படங்களும் சுவற்றில் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி படுக்கையறையில் ஸ்ரீதேவியின் சிறுவயது புகைப்படமும். தாய் மற்றும் தந்தையுடன் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படமும் அங்கு ஒட்டப்பட்டுள்ளது.
இந்த பூர்வீக வீட்டில் ஸ்ரீதேவி சித்தியின் மகன்களான சதிஷ்-ஆனந்தன் வசித்து வந்துள்ளனர். சதீஷ் இறந்துவிட்டதைத் தொடர்ந்து ஆனந்தன் மட்டுமே பூர்விக இல்லத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மீனம்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், அவரது அப்பா தந்தை இறப்புக்கு பின்னர் ஸ்ரீதேவி இங்கு வந்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.