தன் நடிப்புத் திறனால் இந்தியாவையே வசீகரித்த ஸ்ரீதேவிக்கு துபாயில் நேர்ந்த திடீர் மரணம், முதலில் சோகத்தை எழுப்பியது. ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக வரும் முரண்பட்ட தகவல்கள், ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றன.
முதலில் ‘கார்டியாக் அரெஸ்ட்’ என மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘தவறுதலாக குளியலறைத் தொட்டியில் விழுந்து இறந்து விட்டார்’ என போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்கிறது
. ‘மூழ்கி இறந்தார்’ என டாக்டர்கள் சொல்லலாம். ‘தவறுதலாக’ என அவர்கள் எப்படிச் சொல்லமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
இன்னும் பல கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன…
துபாயைப் பொறுத்தவரை, மருத்துவமனையில் யாராவது மரணமடைந்தால் மட்டுமே உடலை உடனே குடும்பத்தினரிடம் ஒப்படைப்பார்கள்.
மற்ற எங்கு இறந்தாலும், அது இயற்கை மரணமாக இருந்தாலும் அதுபற்றி விசாரணை நடக்கும். அதிலும் வெளிநாட்டவர் என்றால், தீவிரமாக விசாரணை நடக்கும்.
மருத்துவமனைக்கு ஸ்ரீதேவியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதும், ‘மரணத்தில் சந்தேகமில்லை. இதயத்துடிப்பு திடீரென நின்றதால்தான் மரணமடைந்தார்’ என டாக்டர்கள் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி யாருமே சொல்லவில்லை என்று தெரிகிறது. அப்படியானால், இப்படி ஒரு தகவலைப் பரப்பியது யார்?
தங்கள் உறவினரின் திருமணத்துக்காக கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் பிப்ரவரி 18-ம் தேதி துபாய் சென்றார் ஸ்ரீதேவி.
திருமணம் முடிந்து 21-ம் தேதி கணவரும் மகளும் இந்தியா திரும்பிவிட, ஸ்ரீதேவி மட்டும் தனியாக துபாயில் தங்கியது ஏன்? அவர்களுக்குள் என்ன பிரச்னை?
அதிலும், ஏற்கெனவே தங்கியிருந்த ஹோட்டல் அறையைக் காலிசெய்துவிட்டு ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலுக்கு அவர் இடம் மாறியது ஏன்? போனி கபூருக்கு இந்தியாவில் சில நிகழ்ச்சிகள் இருந்ததைக் காரணம் சொல்கிறார்கள். அதற்காக, அவர்களின் மகளுமா திரும்பியிருக்க வேண்டும்?
பிப்ரவரி 21-ம் தேதி அந்த ஹோட்டல் அறைக்குப் போன ஸ்ரீதேவி, அவர் மரணமடைந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு வரை கிட்டத்தட்ட 72 மணி நேரம், தனது அறையைவிட்டு வெளியில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அது ஏதோ சாதாரண ஹோட்டல் இல்லை. 400 அறைகள் கொண்ட, சகல வசதிகளும் நிறைந்த 56 மாடி ஹோட்டல். ஒரு விருந்தினர், 72 மணி நேரமாக தன் அறையிலிருந்து வெளியில் வரவில்லையென்றால், குறைந்தபட்ச சந்தேகம்கூடவா ஹோட்டல் நிர்வாகத்துக்கு வராது? தங்கியிருப்பவரும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்பது அந்த ஹோட்டல் நிர்வாகத்துக்குத் தெரியுமே!
ஸ்ரீதேவியின் போன் அழைப்புகளை இப்போது துபாய் போலீஸ் விசாரணை செய்கிறது. அவர் இறப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் வரை பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விசாரணை இது.
இந்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அதிக அழைப்புகள் அவருக்கு வந்ததாகத் தெரிகிறது. அப்படிப் பேசியவர் யார்? அவரின் நோக்கம் என்ன?
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஹோட்டல் தரப்பிலிருந்து தெரிவித்ததாக, துபாய் பத்திரிகை ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
‘இரவு 10.30 மணிக்கு ரூம் சர்வீஸுக்கு போன் செய்து தண்ணீர் கேட்டார். 15 நிமிடங்களில் ஹோட்டல் ஊழியர் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் காலிங் பெல்லை அடித்தபோது, கதவை அவர் திறக்கவில்லை.
அதன்பின் ஹோட்டல் நிர்வாகிகள் பயந்துபோய் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனபோது, அவர் பாத்ரூமுக்குள் தரையில் மயங்கி விழுந்துகிடந்தார். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. அவர் அறையில் யாரும் இல்லை’ என்பதுதான் அந்தச் செய்தி. இது உண்மையா?
போலீஸில் போனி கபூர் சொல்லியிருக்கும் வாக்குமூலம் வேறாக உள்ளது. 24-ம் தேதி இரவு திடீரென மனைவிக்கு ‘சர்ப்ரைஸ்’ தருவதற்காக இந்தியாவிலிருந்து போனி கபூர் கிளம்பிப் போனார்.
திடீரென இவரைப் பார்த்ததும் ஸ்ரீதேவிக்கு ஆச்சர்யம். டின்னர் சாப்பிட போனி கபூர் வெளியில் கூப்பிட்டார். சில நிமிடங்கள் பேசிவிட்டு, ஸ்ரீதேவி குளிக்கப் போனார். 15 நிமிடங்களாகியும் ஸ்ரீதேவி வராததால், பாத்ரூம் கதவைத் தட்டினார் போனி. எந்தப் பதிலும் வராததால் கதவைத் திறந்து பார்த்தார்.
உள்ளே குளியலறைத் தொட்டியில் ஸ்ரீதேவி மூழ்கிக் கிடந்தார். உடனே, தன் நண்பருக்கு போன் செய்தார் போனி. அதன்பிறகே போலீஸுக்குத் தகவல் சொன்னார்.
மேல்தட்டு குடும்பத்தில் பிறந்த போனி, உலகெங்கும் போய் ஹோட்டல்களில் தங்கிய அனுபவம் உள்ளவர். இதுபோன்ற சூழலில் ஹோட்டலில் சொன்னால், அவசரமாக டாக்டரை ஏற்பாடு செய்வார்கள்.
சில ஹோட்டல்களில் நிரந்தரமாக டாக்டர்கள் இருப்பார்கள். இந்த உதவியைக் கேட்டு மனைவியைக் காப்பாற்ற அவர் நினைக்காதது ஏன்?
குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி தவறுதலாக விழுந்தார் என்றால், சின்ன சத்தம்கூடவா அறையில் இருந்த போனி கபூருக்குக் கேட்கவில்லை? பொதுவாக பாத்ரூம் குளியல் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்காது. குளிக்கப் போகும்போதுதான் தண்ணீர் நிரப்புவார்கள்.
கணவர் வந்து அவசரமாகக் கூப்பிட்டதால்தான் ஸ்ரீதேவி குளிக்கக் கிளம்பினார். அந்த இடைவெளியில் குளியல் தொட்டியில் தண்ணீர் நிரம்ப வாய்ப்பில்லை. பிறகு எப்படி அதில் தண்ணீர் இருந்தது? குளியல் தொட்டியில் தவறிவிழுந்து இறக்க ஸ்ரீதேவி என்ன குழந்தையா?
இறக்கும்போது அவர் மது அருந்தியிருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. ஆனால், ‘‘ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை’’ என அவர்களின் குடும்ப நண்பரும், பல பார்ட்டிகளில் கலந்துகொள்பவருமான முன்னாள் எம்.பி அமர்சிங் சொல்கிறார். பிறகு எப்படி இது சாத்தியம்?
இந்த விடை தெரியாத கேள்விகள் ஸ்ரீதேவியோடு புதைந்து போய்விடக்கூடாது.
– அகஸ்டஸ்