கமல் எழுதிய முதல் கவிதை மகள் ஸ்ருதிக்காக…

கமல்ஹாசன் தன் மகள் ஸ்ருதிஹாசனுக்காக முதன்முதலில் எழுதிய கவிதை தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய அரசியல் கட்சியை சமீபத்தில் துவக்கியுள்ளார்.

இந்த பெயரில் இடம்பெற்றுள்ள “மய்யம்” என்ற சொல் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானது தான்.

ஏனெனில், சுமார் 30 வருடங்களுக்கு முன்பே அந்த பெயரில் பத்திரிக்கை நடத்தியவர் அவர்.

1980-களில் தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது பல பத்திரிக்கைகளில், சிறுகதை, தொடர்கதை, கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதி வந்த கமல், தான் நடத்தி வந்த மய்யம் பத்திரிக்கையில் அடிக்கடி கவிதைகளும் எழுதிவந்தார்.

அதில் சில சிறப்பான கவிதைகளும் உண்டு. குறிப்பாக தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது, ஓர் கவிதை எழுதி, மய்யம் பத்திரிகையில் கமல் வெளியிட்டிருந்த போது சுஜாதா உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்கள் அதற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

அந்த கவிதையை கமல் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்களா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில், பல பாராட்டுகளை பெற்ற கமலின் அந்த கவிதை வரிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த கவிதை வரிகள்:

ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த

என் மழலையின் மறுகுழைவு

மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு

தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில்.

பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம்

தவறாமல் நான் செய்வேன் உன்னிடம்

கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க

உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்

என் அப்பனைப் போல்.

அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும்

கவிதைகளை இன்றே எழுதிவிட்டால்

உன்னுடன் பேசலாம்

எழுதிவிட்டேன் வா பேச!