யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகைதந்திருந்தனர்.
இதில் அமைச்சர் அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது அங்கு இணைத்தலைவர் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரதிவித்தார்.
இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
EPRLF கட்சியில் அங்கம்வகித்துவந்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் காரணமாக அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.