ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, சீரற்ற இதய துடிப்பு, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைய முக்கிய காரணமாகின்றன. ஆண்களுக்கு 13.5-17.5 மி.கி./டெ.லி. அளவும், பெண்களுக்கு 12-15.5 மி.கி/டெ.லி அளவும் இருக்க வேண்டும். இதில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.
ஹீமோகுளாபின் அதிகரிக்க செய்யும் உணவுகள்
வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தாலும் ஹீமோகுளாபின் அளவு குறையும். அதன் அளவை அதிகரிக்க சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டியது அவசியம். இறைச்சி, இறால், கீரைகள், பாதாம், பேரீச்சம் பழம், பயறு, கடல் சிப்பிகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்பாளி, திராட்சை, தக்காளி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதுளம்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தலாம். ஆப்பிள் பழத்தை ஜூஸாகவும் பருகலாம்.
பெண்கள் செய்ய வேண்டியவை
மாதவிடாய், கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைய தொடங்கும். அதனை கட்டுப்படுத்த இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். முளைகட்டிய பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, கடலை, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். தினமும் உடற்பயிற்சி செய்து வருவதும் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய துணை புரியும்.