பல ஆண்டுகளுக்கு முன்னர், நம்தேசத்தின் உயிர்நாடியாக, கிராமங்கள் திகழ்ந்தன. நகரங்களில், தொழில், அலுவல்ரீதியாக உள்ளவர்கள் மட்டுமே, வசித்துவந்தார்கள்.
நகரங்களில் மக்கள் வசித்தாலும், அவர்களின் வேர் கிராமங்களிலேயே இருந்தது, நவீனமயமான தற்காலத்தில், கிராமங்கள், அவற்றின் தன்மைகளை இழப்பதன் விளைவுகளால், கிராமங்களின் இயற்கை எழில்கொஞ்சும் வயல்கள், தோட்டங்கள், குளங்கள், வாய்க்கால்கள் போன்றவை பொலிவிழந்து வருகின்றன.
முற்காலத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் காத்ததில், கிராமங்களில் உள்ள குளங்களுக்கு பெரும்பங்குண்டு, மழைநீரை சேமிக்கும் தொட்டிகளாக குளங்கள் விளங்கின.
மிகையாக வரும் ஆற்றுநீரும் குளத்தில் சேர வழி இருந்தது. வற்றாத நீர்நிலைகளால், பருவமழை தவறாமல் பொழிந்து, மண்வளம், விவசாயம் செழிப்பாக இருந்தன.
குளங்கள் நிலத்தடி நீர்மட்ட உயர்வில் மட்டும் பங்கு வகிக்கவில்லை, அவை கிராமங்களில் உள்ள மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், அவர்களின் மனநிலைகளை சீராக்குவதிலும் பெரும்பங்கு வகித்தன. முன்னோர்கள், குளத்துநீரில் குளிப்பதன் நன்மைகளுக்காகவே, எல்லா கோவில்களிலும், குளங்களை ஏற்படுத்தி, அந்த குளங்களில் குளிக்க, வியாதிகள் தீரும் மனநலம் வலுவாகும், குழந்தைப்பேறு உண்டாகும் என்று குளத்தில் நீராடுவதன் பலன்களை, மக்களுக்கு அறிவுறுத்தி வைத்தனர்.
குளத்து நீரில் நீராடுவதால் என்ன நன்மை?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் எனும் பழந்தமிழ்சொல் போல, குளங்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் எனும் வழக்கும், முற்காலங்களில் இருந்திருக்கவேண்டும் என்பதுபோல, குளங்கள் இல்லாத ஊரைக் காணமுடியாத நிலை, நம் தமிழகத்தில் முன்னர் இருந்தது.
ஆறுகள் பாயும் இடங்களில் உள்ள நிலங்களை வலுப்படுத்தினாலும், அவை மழைக்காலங்களில் பெருவெள்ளமாகப் பாய்ந்து, நிலங்களையும் பயிர்களையும் பாதிக்காமல் காக்கவே, ஆறுகள் பாயும் இடங்களில், கிராமங்களில் ஆங்காங்கே, குளங்களை, ஏரிகளை வெட்டி வைத்தனர். இதன் மூலம், உபரி நீர், வெள்ள நீர், மக்களை பாதிக்காமல், குளங்களில் சென்று சேரும் நிலை இருந்தது. ஆறுகள் இல்லாத இடங்களில், நிலத்தடி நீரும் மழைநீரும் சேர்ந்து நிரம்பும் வகையில், மக்களின் குளியலுக்காகவும், விலங்குகளின் தாகம் தீர்க்கவும், குளங்களை வெட்டி வைத்திருப்பர்.
இறைவழிபாட்டின் ஒரு அங்கமாக, குளத்தில் நீராடுவது, மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒன்றானது. விஷேச தினங்களில் குளங்களில் நீராடுவது, புனிதமாகக் கருதப்படுகிறது, கும்பகோணம் மகாமகக்குளத்தில், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக தீர்த்தவாரியில் நீராடுவது, பாவங்களைப் போக்கி, உடல்நலனை, மனநலனை காக்கும் விழாவாக, இலட்சக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
உண்மையிலேயே, குளத்து நீரில் என்ன இருக்கிறது?
குளத்துநீர், உடல் வியாதி எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. குளத்தில் உள்ள உயிரினங்கள், தாவரங்களின் வேர்கள் மற்றும் அவற்றின் உதிர்ந்த தழைகள், நீரில் கலந்திருப்பதால், உடலுக்கு நலம்தரும் தாதுக்கள் என்சைம்கள் மற்றும் வேதிச்சத்துக்கள், குளத்துநீரில் நிறைந்துள்ளன. வளமிக்க களிமண் நிலத்திலேயே, பெரும்பாலான குளங்கள் அமைந்திருக்கின்றன.
குளத்தில் தினமும் குளிப்பது, பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது. குளிர்ந்த குளத்துநீரில் குளித்துவருவதன் மூலம், உடல் சூடு குறைகிறது, மலச்சிக்கல் நீங்கி, இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் வியாதி எதிர்ப்பு ஆற்றல் மேம்படுகிறது.
எந்த இடத்தில் உள்ள குளத்தில் குளித்தால் என்ன நன்மை தெரியுமா?
- நாவல் மரங்கள் சூழ்ந்த இடங்களில் உள்ள குளத்தில் தொடர்ந்து நீராடிவர, சர்க்கரை பாதிப்புகள் மற்றும் கால் மூட்டுவலி பாதிப்புகள் விலகி, உடல் நலமாகும்.
- நெல்லி மரங்கள் நிறைந்த சோலையில் உள்ள குளத்தில் தினமும் குளித்துவர, கண் பார்வைக்குறைபாடுகள் நீங்கி, உடலும் மனமும் புத்துணர்வடையும். நெல்லிக்கனிகள், நெல்லிமரக்கிளைகள் விழுந்துகிடக்கும் குளத்து நீர், மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.
- கீழாநெல்லிச்செடிகள், வல்லாரை, பொன்னாங்கன்னி கீரைகள் செழித்து வளரும் பகுதிகளில் உள்ள குளத்தில் குளித்துவர, கண்பார்வை கோளாறு, இதய இரத்த அழுத்த பாதிப்புகள் விலகும்.
- குளக்கரைகளில் அரசமரங்கள் உள்ள குளத்தில் குளித்துவர, பெண்களின் குழந்தையின்மை பாதிப்புகள் அகன்று, குழந்தைப்பேறடைய வாய்ப்பாகும்.
- ஆலமரத்தடியில் உள்ள குளத்தில் குளிக்க, ஆண்மை பாதிப்புகள் விலகி, மகப்பேறு வாய்ப்புகள் ஏற்படும்.
- எலுமிச்சை மற்றும் அத்தி மரங்கள் சூழ்ந்த குளங்களில் குளிக்க, உடல் புத்துணர்வாகி, இரத்தம் தூய்மையாகி, இரத்த ஓட்டம் சீராகும்.
இவை யாவும் முன்னோர்களின் மூடநம்பிக்கைகள் அல்ல, இவை இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளும் உண்மைகள். நீரில் கரைந்த மரங்களின் இலைகள், வேர்கள், பழங்கள், காய்கள் போன்றவற்றினால், குளத்துநீரில் ஏற்படும் வேதிமாற்றம், மனிதர் உடல்நலத்திற்கு நலம் தருகிறது. குளக்கரை மரங்களின் தூய ஆக்சிஜன் காற்றை சுவாசிப்பதன் மூலம், பெண்களின் கருவள பாதிப்புகள் அகன்று, மழலைப்பேறு அடைய வாய்ப்பு உண்டாகிறது.