புலிகள் மீது தாக்குதல் மேற்கொண்டது போன்று விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய நல்லாட்சியை தாம் கண்டிப்பதாக எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம, ராஜாங்கனயில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிசார் வன்முறையை பிரயோகித்துள்ளதாக தெரிவித்து வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்துவதாக வாக்குறுதிகள் வழங்கியே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது.
ஆனால் நீர்ப்பாசன பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை புலிப் பயங்கரவாதிகளாக கருதி அதே அரசாங்கம், பொலிசாரை ஏவி கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியாளர்கள் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்க அப்பாவி விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் எஸ்.எம். ரஞ்சித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.