ஒயின் குடித்தால் என்ன நடக்கும்?

குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.  ஆனால், ரெட் ஒயின் குடிப்பது இதயம், பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என சொல்கிறது அண்மையில் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று.

நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் ஒயினில் உள்ள பொலிபீனோல்ஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது என மாட்ரிட்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சிக் கழகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் ஒயினில் இருக்கும் ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. சோதனையில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபினால்களின் செயல்திறன் 47 மணி நேரம் வரை நீடித்தது.

இதனால், நோய் எதிர்ப்பு திறன் ரெட் ஒயினில் அதிகம் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். எனவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வயதிற்கு தகுந்த அளவில், ரெட் ஒயினை ஓவ்வொருவரும் அருந்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முன்னதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்வெரட்ரோல் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் ரெட் ஒயினில் உள்ளதால் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை கொல்லும் திறன் உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஒயின் குடிப்பதால் தோல் மிகவும் பொலிவுடன் காணப்படும் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

ஆண்கள் மட்டுமல்ல, பருக்களின் தொல்லையில் இருந்து விடுபட பெண்களும் மருந்து போல சில டீஸ்பூன் அளவுக்கு ரெட் ஒயின் குடிக்கலாம். போதைக்காக இல்லாமல் மருந்தாக ரெட் ஒயினை பயன்படுத்தினால் ஏராளமான பலன்களைப் பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் ஊரில் மக்கள் எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள். அதனால்தான், இதுபோன்ற மருந்தைக் கூட பரிந்துரைக்க பயமாக இருக்கின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.