தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
சளி தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் அவருக்கு தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ‘டியூப்பை’ அகற்றிவிட டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
கருணாநிதிக்கு பழைய நினைவுகள் தெரிவதற்காக அவ்வப்போது அவரை வெளியில் அழைத்து வந்து உற்சாகப்படுத்துகின்றனர்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் சென்று கண்காட்சிகளை பார்த்து வந்தார். அதன் பிறகு அறிவாலயம் அழைத்து சென்று வந்தனர்.
பழைய நினைவுகளை பார்த்து மகிழ்வது குடும்பத்தினர் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது.
கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர்.
கருணாநிதி சோர்வடையாமல் இருப்பதற்காக குடும்பத்தினர் அவரிடம் சகஜமாக பேசி ‘ஜோக்’ அடித்து சிரிக்க வைக்கின்றனர். கருணாநிதியின் பேரனும், நடிகர் அருள்நிதியின் மகனுமான மகிளனை (வயது 2) மு.க. தமிழரசு தினமும் தூக்கிக் கொண்டு கருணாநிதியுடன் விளையாட வைப்பது வழக்கம்.
கருணாநிதி தனது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ பதிவை மு.க.தமிழரசு வெளியிட்டுள்ளார்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்து வீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடித்து மகிழ்கிறான்.
அப்போது மகள் செல்வி கருணாநிதியை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி, நீங்கள் பவுலர், நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தை போடுங்கப்பா என்கிறார். உடனே கருணாநிதி பந்து வீசுகிறார். இதை கொள்ளுப்பேரனும் கிரிக்கெட் மட்டையால் பந்தை அடிக்கிறான். ஓடி விழும் பந்தை தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்து கொடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் கருணாநிதி பந்தை வீசுவது போல் பாவலா செய்வதும், பந்தை வீசாமல் அடுத்த முறை வீசுவதும் சிரிப்பை உருவாக்குகிறது.
உடனே செல்வியும் தமிழரசுவின் மனைவி மோகனாவும், எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார் என்று சிரிக்கின்றனர். கருணாநிதி பந்து வீசும் போதெல்லாம் ‘சூப்பர்’ என்று செல்வி உற்சாகப்படுத்தி கை தட்டுகிறார். எப்படி பந்து வீசுகிறார் பாருங்கள் என்று மோகனாவும் பேசுகிறார். விளையாடியது போதுமா? என்று கேட்கிறார்கள். அப்போது விளையாடிக் கொண்டிருக்கும் கொள்ளுப் பேரன் தாத்தா பந்து போடுங்க என்று அழைக்கிறான்.
இந்த காட்சிகள் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கருணாநிதி முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்ட இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தெரிகிறது.