காசநோய்… அறிகுறிகள், சோதனைகள், சிகிச்சைகள்!

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் இரண்டு பேர்; ஒரு நாளைக்கு 1,150 பேர்; ஆண்டுக்கு 4.2 லட்சம் பேரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அறிகுறிகளைக் கவனிக்காமல்விட்டால் ஆளையே காலி செய்துவிடும் கொடிய நோய். இந்தக் கொடிய நோயுடன் ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இரண்டாவது இடத்திலிருக்கிறது இந்தியா. “2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்காகச் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்கிறார் மதுரை தோப்பூரில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரியான டாக்டர் காந்திமதிநாதன். காசநோய்க்கான மருத்துவத்தின் அண்மைக்கால வளர்ச்சி பற்றி நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்…

நுரையீரல்

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்கும் நோய்களில் காசநோயும் ஒன்று. மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) நுண்கிருமியால் வரக்கூடிய இந்த நோய், பரம்பரை நோயல்ல. இதைப் பொதுவாக டி.பி (TB) என்றே அழைக்கிறோம். TB என்பது `Tubercle bacillus’ அல்லது `Tuberculosis’ என்பதன் சுருக்கமே.டாக்டர் காந்திமதிநாதன்

தலைமுடி, நகம், பல் தவிர உடம்பின் அனைத்து பாகங்களையும் தாக்கக்கூடியது இந்த நோய். சர்க்கரைநோய் மற்றும் ஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்குக் காசநோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த நோயைச் சரியான சிகிச்சைகள் மூலம் முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும்.

உலகில் உள்ள 104 லட்சம் காசநோயாளிகளில், நான்கில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 14 லட்சம் பேர் இந்த நோயால் இறந்துபோகிறார்கள். இதில் இந்தியர்கள் மட்டுமே 4.2 லட்சம் பேர். நம் நாட்டில் 5 நிமிடங்களுக்கு 2 பேரை இந்த நோய் பலி வாங்குகிறது. அதாவது ஒரு நாளில் 1,150 பேர். ஹெச்.ஐ.வி நோயுடன் காசநோய் உள்ளவர்கள் 3.9 லட்சம் பேர். இவர்களில் 37,000 பேர் இந்தியர்களே. உலக அளவில் எம்.டி.ஆர் காசநோய் (Multi Drug Resistance – MDR Tuberculosis) என்ற பன்மருந்து எதிர்ப்புக் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சம், இவர்களில் 1.4 லட்சம் பேர் இந்தியர்களே. இதிலிருந்தே இந்தியாவில் இந்த நோயின் ஆபத்து குறித்தும், அதைத் தடுப்பதற்கான அவசியம் குறித்தும் புரிந்துகொள்ளலாம்.

2016-ம் ஆண்டு உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், காசநோய், எம்.டி.ஆர்  காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. ஹெச்.ஐ.வி  மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்திலிருக்கிறது.

காசநோயின் வகைகள்…

1.நுரையீரல் காசநோய் (Pulmonary Tuberculosis) – 85 சதவிகிதம்

2.நுரையீரல் அல்லாத பகுதிகளில் பாதிக்கும் காசநோய் (Pulmonary Tuberculosis)- 15 சதவிகிதம்

நுரையீரல் காசநோய் நோய்க்கிருமி உள்ள ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் திரவத் துளிகளாகக் காற்றின் மூலம் கிருமி பரவும். இந்தக் காரணத்தால் மட்டுமே ஆண்டுக்கு 10 முதல் 15 சதவிகிதம் பேருக்குக் காசநோய் பரவுகிறது.

காசநோய் அறிகுறிகள்…

ஒருவருக்கு  இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல்,  மாலை நேரக் காய்ச்சல்,  பசியின்மை,  உடல் எடை குறைதல், ரத்தம் கலந்த சளி, மார்புவலி இருப்பது காசநோயின் அறிகுறிகளே.  இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால் முதல் கட்டமாக சளிப் பரிசோதனை செய்யப்படும். அவர் ஏற்கெனவே காசநோய்க்கான சிகிச்சை எடுத்திருந்தால், எத்தனை நாள்கள், எப்படிப்பட்ட சிகிச்சை என்பதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். இதில் இரண்டு வகையான மருத்துவ முறைகள் இருக்கின்றன. புதிதாகக் காசநோய் வந்தால் அவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் தீவிர சிகிச்சையும், நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சையும் வழங்கப்படும். மொத்தமாக ஆறு முதல் ஏழு மாதங்கள் சிகிச்சையளிக்கப்படும்.

ஏற்கெனவே காசநோய் சிகிச்சை பெற்று, ஒரு மாதத்துக்கும் மேலாக மாத்திரை சாப்பிட்டு, முழுமையாக  மாத்திரைகள் உட்கொள்ளாமல் பாதியில் நிறுத்தியவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் முழுமையான சிகிச்சை அளிக்கப்படும். அவர்களுக்கு மீண்டும் சளியில் காசநோய் கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டால், 8 முதல் 9 மாதங்கள்  சிகிச்சை வழங்கப்படும். இவர்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் தீவிர சிகிச்சையும், ஐந்து மாதங்கள் தொடர் சிகிச்சையும்  எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால் தடையில்லாமல் முழுமையான சிகிச்சை கொடுப்பதற்காக, குறுகியகால கூட்டு மருந்து சிகிச்சை (DOTS) அளிக்க ஒருவர் நியமிக்கப்படுவார். அவரிடம் மாத்திரைகள் தந்து, சம்பந்தப்பட்ட காசநோயாளி மறக்காமல் மாத்திரை  சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்வார்கள். இந்த நோயாளிகள் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருந்தால் (சிகிச்சை எடுக்கும் காலத்தில்) மாதந்தோறும் 1,000 ரூபாய்  ஊக்கத்தொகை வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படும். நியமிக்கப்பட்டவர் வேலையைச் சரியாக முடித்தால், அவருக்கும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையை அரசு வழங்கும்.

காசநோய்

ஒருவருக்குக் காசநோய் சிகிச்சை ஆரம்பித்ததும், சளிப் பரிசோதனைகள் மூலம் நோய்க் கிருமிகள் குறைவது உறுதிசெய்யப்படும். நோய்க் கிருமி குறையாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், எம்.டி.ஆர் காசநோய் பரிசோதனைகள் செய்யப்படும்.  பரிசோதனையின்போது காசநோய்க் கிருமிகள் இல்லை என்றால், எக்ஸ்-ரே, CBNAAT பரிசோதனைகளின் மூலமாகக் காசநோய்க் கிருமிகள் இல்லை என்பதை உறுதிசெய்வார்கள். நுரையீரல் தவிர உடலின் மற்ற பாகங்களில் வரும் காசநோய்களுக்கு, அதற்கேற்றபடி பரிசோதனைகள் செய்யப்படும். உதாரணமாக, கழுத்தில் காசநோய்க்கட்டி இருப்பதாகச் சந்தேகப்பட்டால், ஓர் ஊசி மூலம் கட்டியிலிருந்து சதை எடுக்கப்பட்டு பரிசோதனை (Fine Needle Aspiration Cytology -FNAC) செய்யப்படும். இதைத் தொடர்ந்து CBNAAT பரிசோதனையும் செய்யப்படும். இல்லையென்றால், உடலில் இருந்து கட்டியை எடுத்து நோயியல் (Biopsy) பரிசோதனைக்கு உட்படுத்தி, காசநோய் பாதிப்பு உள்ளதா என்பது கண்டறியப்படும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை 5 சதவிகிதம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடர் இருமல், காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் மற்றும் எடை அதிகரிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும். அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்குச் சளிப் பரிசோதனை, நுண்ணோக்கிப் பரிசோதனை (CBNAAT, X-Ray), மாண்டோ பரிசோதனை (Mantoux Test) மூலம் காசநோய் உள்ளதா என்று கண்டறியப்படும். சளியில் காசநோய்க் கிருமி உள்ள நோயாளிகளின் அருகில் உள்ள குழந்தைகளுக்குக் காசநோய்த் தடுப்பு மருந்தாக INH மாத்திரை ஆறு மாதங்களுக்குக் கொடுக்கப்படும்.

காசநோய்

காசநோய் சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ளாமல் இடையில் விட்டுவிட்டால், இந்த நோய் எம்.டி.ஆர் காசநோயாக (MDR TB) மாறவும் வாய்ப்புள்ளது. எம்.டி.ஆர் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (Multi Drug Resistant Tuberculosis – MDR TB) INH மற்றும் Rifampicin போன்ற மருந்துகளால்  நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல மற்ற காசநோய் சிகிச்சை மருந்துகளுக்கு இது கட்டுப்படவோ, கட்டுப்படாமல் போகவும் வாய்ப்புள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை எம்.டி.ஆர் காசநோயை நுண்ணுயிர் வளர்ப்பு சோதனை (Solid Culture – LJ Medium) மூலம் கண்டறிய குறைந்தது மூன்று மாதங்கள் வரை ஆகின. ஆனால், இப்போது இரண்டு நவீன முறைகள் மூலம் எம்.டி.ஆர்-ஐ காசநோயை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

1.CBNAAT என்ற முறையில் இரண்டுமணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம்.

2. L.P.A என்ற முறையில் இரண்டு முதல் மூன்று நாள்களில் கண்டுபிடித்துவிடலாம்.

மேற்கூறிய இரண்டு முறைகள் வந்த பின்னரே எம்.டி.ஆர் காசநோயை விரைவாகக் கண்டுபிடித்து, சிகிச்சையை ஆரம்பிக்க முடிகிறது. காசநோய்க்கு சிகிச்சை பெறும்போது, சளியில் காசநோய் உள்ளவர்கள், மறுமுறை சிகிச்சை மேற்கொள்பவர்கள் (CAT – II); எம்.டி.ஆர் காசநோய்க் கிருமி உள்ளவர்களின் அருகில் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட காசநோயாளிகள் ஆகியோர் எம்.டி.ஆர் காசநோய் கிருமி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நோய்க் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

எம்.டி.ஆர் காசநோய்க்கான சிகிச்சை காலம் இரண்டு ஆண்டுகள்.  தீவிர சிகிச்சை காலம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள், தொடர் சிகிச்சை காலம் 18 மாதங்கள்.  எம்.டி.ஆர் காசநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ளும்போது காசநோய்க் கிருமி குறைந்திருக்கிறதா என்பது, சாலிட் கல்ச்சர் சோதனையின் (Solid Culture- நுண்ணுயிர் வளர்ப்பு சோதனை) மூலம் உறுதி செய்யப்படும்.

மாத்திரைகள்

முற்றிய நிலை எம்.டி.ஆர் காசநோய் (Extensively Drug Resistant Tuberculosis – XDR TB) என்பது, எம்.டி.ஆர் காசநோய்க்காக ஊசி மூலம் போடப்படும் இரண்டாம் நிலை மருந்துகளுக்கும், Fluoroquinolone மருந்துகளுக்கும் கட்டுப்படாத அளவுக்குக் கிருமியின் பாதிப்பு அதிகமாக இருப்பது. முற்றியநிலை எம்.டி.ஆர் காசநோயாளிகளை (XDR TB) எம்.டி.ஆர் காசநோய் மையத்தில் (DRTB Centre) அனுமதித்து சிகிச்சையைத் தொடங்குவார்கள். இரண்டு வாரங்களுக்கு மாத்திரை சாப்பிட்ட பிறகு, தொடர் சிகிச்சைக்காக அருகிலிருக்கும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இப்போது எம்.டி.ஆர் காசநோய் சிகிச்சைக்காக `Bedaquiline’ என்ற மாத்திரை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாத்திரை பன்மருந்து எதிர்ப்பு  சிகிச்சை மாத்திரைகளுடன் முதல் ஆறு மாதங்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்குத் தினமும், பின்னர் வாரத்துக்கு மூன்று நாள்களும் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைக்காக ஒரு நோயாளிக்கு  ஆறு மாதத்துக்கு ரூ.22 லட்சம் செலவாகிறது. நோயாளிகளுக்கு இந்த மருந்தை அரசு இலவசமாக வழங்கிவருகிறது.

தனியார் மருத்துவமனைகள் காசநோய்களுக்குச் சிறப்பான சிகிச்சைகள் செய்தாலும், அதை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இந்த இலக்கை அடைய 95 சதவிகிதம் காசநோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும். இதற்காக 90 சதவிகிதம் நோய் பாதிப்பைக் குறைக்க வேண்டும். இந்த நோயே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  இதை நோக்கியே இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

இதுவரை காசநோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த நோயைக் கண்டறியும் சோதனைகளை அரசு செய்துவந்தது. இனி மருத்துவ நிலையங்களுக்கு வராத, வர இயலாதவர்களுக்கும், அவர்களின் வீடுகளுக்கே சென்று சோதனை செய்யும் அடுத்த கட்டத்தில் கால் வைத்திருக்கிறது அரசு. காசநோயைத் துரிதமாகக் கண்டறியும் சோதனைகள் மூலம், இந்த நோயே இல்லாத இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறது அரசு” என்கிறார் டாக்டர் காந்திமதிநாதன்.

காசநோய்

பொது மருத்துவர் டி.வி.வெங்கடராமனிடம், “காசநோயை எப்படி எதிர்கொள்வது?’’ என்று கேட்டோம். “இந்தியாவைப் பொறுத்தவரை கண்டுபிடிக்கப்படாத டி.பி நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகம். சிகிச்சையை அரையும்குறையாக நிறுத்தியவர்களுக்கு எம்.டி.ஆர்  டி.பி பாக்டீரியா உருவாகி, தீராத நோயை ஏற்படுத்தி, அதை மேலும் பரவச்செய்கிறது. டி.பி நோய்த் தாக்குதல் நம் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போதோ அல்லது தொடர்ந்து டி.பி கிருமிகளை  அதிகமாக எதிர்கொள்ளும்போதோ ஏற்படும்.

வயோதிகம், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரைநோய், ஸ்டீராய்டு மருந்து சாப்பிடுவது போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, காசநோய்த் தாக்குதல் ஏற்படும்.  ஆஸ்துமா நோயாளிகள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து இருமல் இருந்தால், ஸ்டீராய்டு மருந்துகளை அடிக்கடி உட்கொள்வார்கள்.  இவர்கள் இந்த விஷயத்தில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். புகைபிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கும் தொடர்ச்சியாக இருமல் வரும். இதை டி.பி என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. நோயை முற்றிலும் போக்கும் மருந்துகள் இருந்தாலும், நோயாளிகள் நோயை முழுமையாகப் புரிந்துகொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்குக் காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகச் சிறையில் அடைத்துவிடுவார்கள். மக்களின் மனதில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், `பொது இடங்களில் சளியைத் துப்பக் கூடாது’ என்று அறிவுறுத்த வேண்டும். வாயை துணியால் மூடிக்கொண்டு இரும வேண்டும். சளியை, கிருமி நாசினி உள்ள ஒரு கப்பில் துப்பி மூடிவைப்பதுடன், மற்றவர்களுக்குப் பரவாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைக் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிட்டுவந்த பிறகும் நோய் இருந்தால், அவரது சளியில் இருக்கும் கிருமியின் மருந்து எதிர்ப்பு சக்தியைக் கண்டறிய வேண்டும். CBNAAT டெஸ்ட் மூலம், இரண்டு மணி நேரத்தில் அந்தக் கிருமியின் மருந்து எதிர்ப்புத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

எல்லா காசநோய் மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவையே. குறிப்பாக ஈரல் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இரண்டாம் கட்ட மருந்துகள் அதிகபட்சமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, இந்த நோய் வந்தால் முழுமையான சிகிச்சைபெற வேண்டியது அவசியம். மது, ஈரலை பாதிக்கக்கூடியது என்பதால் டி.பி நோய் பாதித்தவர்கள் உடனடியாக மது அருந்துவதை நிறுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு டி.பி வந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் இன்சுலின் ஊசியைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

ஹெச் .ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் டி.பி நோய் சீக்கிரம் தொற்றிக்கொள்ளும்.

காச நோய் பரவாமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை …

1) இருமல், தும்மல் வரும்போது வாயைத் துணியால் மூட வேண்டும்.

2) காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களைப் பரிசோதனை செய்து, அவர்களுக்குக் காசநோய்இருந்தால் முறையான, முழுமையான சிகிச்சை பெற வேண்டும்.

3) கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.

4) குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போட வேண்டும்.