வடக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களை அமைதிப் போராட்டங்கள் எனக்கூறுவது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில்,
குருநாகல் தம்புத்தேகம நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் உட்பட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
ரத்துபஸ்வல மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்தது. இன்று இந்த அரசாங்கம் செயற்படுவது எவ்வாறு? அப்பாவி மக்களின் தலைகளை உடைத்து, பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்துச்சென்று அங்கேயும் தாக்கி அகிம்சையான விவசாய மக்களுக்கு அநியாயங்களை செய்கின்றது.
இந்த நாட்டில் மக்களுக்கு அரிசியை வழங்கும் விவசாயக் குடும்பங்கள் மற்றும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜனாதிபதி ஆட்சிசெய்யும்போது விவசாயக் குடும்பங்களைத் தாக்கின்ற தருணத்தில் ஜனாதிபதி எவ்வாறு நீங்கள் மௌனமாக இதனை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை தொடுக்கின்றோம்.
எமது நாட்டில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின்போது பொலிஸாரை இரண்டு நோக்கங்களுக்காக அரசாங்கம் ஈடுபடுத்துகின்றது. வடக்கில் ஒருசட்டமும், தெற்கில் இன்னொரு சட்டமும் செயற்படுத்தப்படுகின்றது.
வடக்கில் சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டம் செய்யும்போது, இராணுவ முகாம்களுக்கு முன்பாக போராட்டம் செய்யும்போது, வடமாகாண சபை அமைச்சர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவதை நிராகரித்தபோது அதனை கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் அரச தலைவர்களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைகின்றனர். மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.
ஆனால் தெற்கில் ஒருவர் தண்ணீர்கோரி போராட்டம் செய்யும்போது விரட்டிவிரட்டி அடிக்கின்றனர். மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்யும்போது அதற்கெதிராக போராடிய நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை சிறைவைத்தார்கள். மாற்றம்தான் என்ன?
மத்திய வங்கி மோசடி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவருக்கே இன்று பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.