இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் சஃபாரியில் சிங்கங்களைப் பார்க்க குழந்தைகளுடன் சென்றார் அபி டூட்ஜ். காருக்குள் அமர்ந்தபடி பூங்காவைச் சுற்றி வரும்போது, திடீரென்று கம்பிக் கதவைத் திறந்துகொண்டு சிங்கங்கள் ஆக்ரோஷமாக ஓடிவந்தன.
“நானும் தோழியும் முன்பக்கம் அமர்ந்திருந்தோம். குழந்தைகள் பின்பக்கம் அமர்ந்திருந்தார்கள். சிங்கங்கள் வெளிவந்ததும் அத்தனை பேரும் பயத்தில் உறைந்து போனோம்.
சுமார் 30 சிங்கங்கள் எங்கள் காரைச் சூழ்ந்துகொண்டன. ஒரு சிங்கம் காரின் முன்பக்கக் கண்ணாடியில் காலால் ஓங்கி அறைந்தது. அடித்த வேகத்தில் கண்ணாடி உடைந்து, சிங்கங்களுக்கு இரையாகிவிடுவோம் என்று நினைத்தேன்.
யாரும் யாருடனும் பேசும் நிலையில் இல்லை. வேகமாக காரை எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது. அதற்கேற்ற உடல் பலமோ, மன தைரியமோ இல்லை.
ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் சிங்கங்கள் கொஞ்சம் அசைந்தால் இன்னும் கோபமடைந்துவிடலாம் என்று பயந்தேன். 50 நிமிடங்களுக்குப் பிறகு சிங்கங்கள் கொஞ்சம் சாந்தமடைந்தன.
பூங்கா ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறோம்” என்கிறார் அபி டூட்ஜ்.