தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசாக, அவராலேயே அறிவிக்கப்பட்டவர் அவருடைய மகன் மு.க.ஸ்டாலின். அதன் பயன்தான் செயல்தலைவர் என்ற பட்டத்தோடு அவர், தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதியும் விரைவில் முழுநேர அரசியலில் இறங்கப்போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தி.மு.க-வின் தலைவராக மு.கருணாநிதி இருந்தவரை அந்தக் கட்சியில் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, செல்வி எனக் குடும்பத்தில் பல பவர் சென்டர்கள் இருந்தனர்.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்விக்குக் கருணாநிதியின் குடும்ப அரசியலும் ஒரு காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.
அதன்பிறகு குடும்ப உறுப்பினர்களைக் கொஞ்சம் அடக்கிவைக்க முற்பட்டார் கருணாநிதி. அதே நேரம், ஸ்டாலினோ கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வேலையில் இறங்கினார்.
ஸ்டாலின் கட்சியைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கிய நேரத்திலேயே, கருணாநிதியின் உடல்நிலையும் நலிவுறத் தொடங்கியதால், தனக்குப் பிறகு கட்சி தன் குடும்பத்தைவிட்டுப் போகக் கூடாது என்ற கணக்கில், தனது அரசியல் வாரிசு ஸ்டாலின்தான் என்று அறிவித்து அவருடைய திட்டத்துக்குக் கதவைத் திறந்துவிட்டார்.
அதன்பிறகு ஸ்டாலின் செயல்தலைவராகப் பதவியேற்றுக் கட்சியின் முழு அதிகாரமிக்கச் சக்தியாக உருமாறினார். அப்போதுமுதல் தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் கட்சிக்குள் கால் ஊன்றிவிடக் கூடாது என்ற முடிவில் தெளிவாக இருந்துவருகிறார் ஸ்டாலின்.
கட்சிப் பதவியில் இருக்கும் கனிமொழியைக்கூடத் தனது கட்டுப்பாட்டைவிட்டு வெளியேறாத வகையில் காய்நகர்த்தி வருகிறார். ஆனால், தன் மருமகனான சபரீசனைக் கட்சியின் ஆலோசராகவே ஸ்டாலின் மாற்றினார்.
கட்சியின் பல்வேறு கொள்கை முடிவுகள் சபரீசன் மூலமே எடுக்கப்பட்டு வந்தன. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சபரீசன் தரப்பு கட்சிக்குள் மேலோட்டமாகத் தலைகாட்ட ஆரம்பித்து, ஸ்டாலின் செயல்தலைவராக மாறியபிறகு கட்சியின் முக்கிய அதிகார மையமாக மாறினார் சபரீசன்.
கட்சிக்குள் காரியம் சாதிக்க நினைத்தவர்கள் மாப்பிள்ளை மனதுவைத்தால் எல்லாம் நடந்துவிடும் என்று வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தனர்.
அதற்கு ஏற்றாற்போலக் கட்சியின் பல முக்கிய விவகாரங்களில் சபரீசன் சொல்வதே நடந்துவந்தது. இந்த நிலையில் ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி, படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டிவந்தார்.
அதே நேரம் ‘முரசொலி’ அறக்கட்டளையை ஸ்டாலின் தரப்பு கையகப்படுத்திய நேரத்தில் ‘முரசொலி’யின் மேலாண்மை இயக்குநர் என்ற பதவியும் உதயநிதிக்கு வழங்கப்பட்டது.
முரசொலி’யில் பொறுப்பு வகித்தாலும், தி.மு.க விவகாரங்களில் பட்டும்படாமலேயே இருந்து வந்தார் உதயநிதி. ஆனால், அவருடைய நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தி.மு.க-வின் முக்கிய நிகழ்வுகளில் அவ்வப்போது, தலைகாட்ட ஆரம்பித்தார்.
‘முரசொலி’ பவளவிழாவில் மேடையிலும் முன்னிறுத்தப்பட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, “அரசியலில் நான் ஈடுபடுவேன்.
நான் தி.மு.க-வில்தான் இருக்கிறேன். காலமும் சூழ்நிலையும் வரும்போது தேர்தல் அரசியலில் கவனம் செலுத்துவேன்” என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார் உதயநிதி.
சபரீசன் கட்சிக்குள் கால் ஊன்றி வந்த நேரத்தில் உயநிதியின் அறிவிப்பு தி.மு.க தொண்டர்களால் உற்றுக் கவனிக்கப்பட்டது. அதே நேரம், தனது ரசிகர் மன்றத்தையும் தி.மு.க-வுக்கு நெருக்கமான வகையில் கொண்டு செலுத்தும் வேலையிலும் உதயநிதி ஈடுபட்டுள்ளார்.
நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்று உதயநிதியை அவருடைய நண்பர் அன்பில் மகேஷ் வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. உதயநிதி அரசியல் என்ட்ரியை ஸ்டாலினும் விரும்பியதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், மாப்பிள்ளையா, மகனா என்ற சிக்கலும் ஸ்டாலினுக்கு ஏற்பட்டு குடும்பத்திலும் அது சர்ச்சையாகியது என்கிறார்கள். ஆனால், உதயநிதி நேரடி அரசியலுக்கு வரட்டும், சபரீசன் ஆலோசகராக இருக்கட்டும் என்ற நிலையில் ஸ்டாலின் குடும்பம் தற்போது உள்ளது.
ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பிரதான இடம் உதயநிதிக்குக் கொடுக்கப்பட்டது. மேலும், சென்னையில் பல இடங்களில் உதயநிதியை வைத்து ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்கள் தி.மு.க நிர்வாகிகள். கிட்டத்தட்ட உதயநிதியை அரசியல் வட்டத்துக்கு இழுத்துவந்துவிட்டார்கள் தி.மு.க நிர்வாகிகள் என்றே சொல்லலாம்.
மேலும், உதயநிதிக்கு நெருக்கமானவர்கள்தான் இப்போது ஸ்டாலினின் ஐ.டி.விங்கிலும் செயல்படுகிறார்கள். உதயநிதியைக் கட்சிக்குள் கொண்டுவந்து முதலில் பொதுக்குழுப் பதவியைக் கொடுக்கும் திட்டம் இருப்பதாகக் கூறுகிறார் முக்கிய நிர்வாகி ஒருவர்.
”கருணாநிதி, தனக்குப் பின்னால் தன்னுடைய மகன் ஸ்டாலின் வர வேண்டும் என்று நினைத்ததைப் போன்று, ஸ்டாலின் தனக்குப் பிறகு உதயநிதி வர வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார்.
அதற்காகவே, தன்னால் உருவாக்கப்பட்ட தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் பதவியை உதயநிதிக்குக் கொடுக்கும் எண்ணமும் ஸ்டாலினுக்கு உள்ளது என்கிறார்கள்.
அதற்கான முதல்படி, கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதிக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை. இது, போகப்போக இன்னும் அதிகமாகும். அதன்பிறகே பதவி வழங்கும் திட்டம் உள்ளது” என்கிறார் அவர்.
உதயநிதி அரசியல் உதயம் விரைவில் தி.மு.க-வில் நடந்தேறப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது.