“அரசியல் வேண்டாம் தலைவா!” – ‘ரஜினி’க்கு ஒரு கடிதம்

ரஜினியின் ‘காலா’ டீசர், அறிவிப்புக்கு முன்பே லீக் ஆகிவிட்டது. ‘ரஜினியோட சின்ன வசனம் லீக் ஆயிடுச்சு’னு எல்லோரும் ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கும்போதே பார்த்தேன், அதுவே சந்தோஷம்னா, டீசரைப் பார்த்தது அதைவிட சந்தோஷம். ஆக மொத்தம், ஆடியன்ஸுக்கு டபுள் கொண்டாட்டம்! 

 

காலா

இந்தக் கடிதத்தை நான் எவ்வளவு சந்தோஷத்தோட எழுதுறேன்னு என் விரல்கள் தட்டிய அந்த கீபேடுக்குத் தெரியும். அடிச்ச நான்கு வார்த்தைகளில் நான் மறந்த வார்த்தைகள் நிறைய இருக்கலாம். என்னடா இவன் முன்னாடி நமக்குக் கடுதாசி போட்டவன் கிடையாதே, இப்போ ஏன் இவன் இதெல்லாம் செய்றான்னு நீங்க யோசிக்கலாம். காரணம் சிம்பிள்… நீங்க கடந்த பத்து வருடத்துல ‘காலா’ டீசரும் விடல, தீவிர அரசியலுக்கும் வரல! ரெண்டையுமே நான் இப்போதான் பார்க்குறேன்.

‘காலா’ன்னா கறுப்பு : 

சின்ன வயசுலே இருந்து உங்களைப் பார்த்துட்டு இருக்கேன் கறுப்பா களையா இருக்கீங்க. ஒவ்வொரு தடவையும் கறுப்பு நிறத்தவர்களின் சிறப்பு என்னனு சொல்லும்போது எங்களில் ஒருத்தாரா மாறுறீங்கனு உங்களுக்குத் தெரியுமானு தெரியலை. ஏன்னா, கடைக்கோடியில் உள்ள மீனவன், உயரப் பறக்கிற விமானத்துல அயல்நாடு போற நம்ம மாணவன் உட்பட எல்லோரும் கறுப்புதான். வெளுப்புதான் மரியாதைனு மார்க்கெட் செய்ற உலகத்துல கறுப்பு உழைப்பாளர்களின் வண்ணம்னு சொன்னது, ‘நச்’ விஷயம். கணிசமான அளவு எங்களை மாதிரி… மன்னிக்கணும், நம்மள மாதிரி கறுப்பர்களுக்குப் பெரிய பூஸ்ட்! நீ ‘காலா’… காலான்னா கறுப்பு.

காலா

இன்னும் எத்தனை நாளைக்குனு நானும் பாக்குறேன் :

‘அநியாயத்தைக் கண்டா அமைதியா போகக் கூடாது; அடிச்சு தூள் பண்ணணும்’னு எப்பவோ நீங்க சொன்னதுதான். மத்தவங்க எல்லோரும் அதைப் பண்றாங்களா, ஏன் நானே அதைப் பண்றேனானு தெரியலை. ஒருவகையில் இது சாத்தியமான்னும் தெரியலை. எனக்குத் தெரிஞ்சு வெவ்வேறு காலகட்டத்துல உங்க சினிமாக்களில் எங்களுக்காக நீங்க இதை செஞ்சுகிட்டேதான் இருக்கீங்க. ‘இவருக்கு வயசாயிடுச்சு, ஏன் தலையில தூக்கிவெச்சுக் கொண்டாடுறீங்க’னு பேசுறவங்க, பேசட்டும். இது இன்னும் எத்தனை நாளைக்குனு நானும் பார்க்குறேன்.

தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே :

இன்றைய காலகட்டத்தில் தன்னோட ரசிகர்களைத் திருப்திப்படுத்தணும்னு நினைக்கிற நட்சத்திரங்கள் சொற்பம்தான். பல பிரச்னைகள் இருந்தும் இந்த வயதில் உங்களையும் பார்த்துக்கிட்டு, ரசிகர்களுக்குச் சொல்ற மாதிரி குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு, உங்களோட கதாபாத்திரத்தில் தன்னையே பொருத்திப் பார்க்கிற ரசிகனையும் முழுசா மகிழ்விக்கிற மாதிரி படங்களும் நடிக்கிறீங்க. கண்டிப்பா உங்களை நிற்க வெச்சு, ‘தில்லு இருந்த மொத்தமா வாங்கலே!’னு ஓப்பன் சேலஞ்ச் பண்ணலாம்.

காலா

உன் முழு ரௌடித்தனத்தைப் பார்க்க வெயிட்டிங் தலைவா :

இவ்வளவு மாஸா ஒரு டீசரை நான் சமீபத்தில் பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை. இந்த டீசர், இந்தப் படத்தின் கதை என்ன,  அது யாரைப் பற்றிய கதைனு சொல்லிட்டு, இது முழுக்கவே ரஜினிகாந்துக்கான ஸ்பேஸ், இதுல அவரை ஃபில் பண்ணணும், ரசிகர்கள் அவரை மட்டுமே ஃபீல் பண்ணணும்னு எடுத்திருக்காங்க. ஒவ்வொரு வசனத்தையும் அதற்கான வீரியத்தோட சொல்லியிருக்கிற விதம்தான், இந்த டீசரோட ஸ்பெஷல் குவாலிட்டி. ‘கொடி பறக்குது’ படத்திற்குப் பிறகு அந்தக் கறுப்பு அவுட்ஃபிட் உங்களுக்குக் கச்சிதமாக செட் ஆகியிருக்கு. சந்தோஷ் நாரயணன் இசை தெறிக்குது. டீசரில் பல மயிர் கூச்செரியச் செய்யும் மொமென்ட்டுகளை எங்களுக்காகக் கொடுத்த உன் முழு ரெளடித்தனத்தை பார்க்க வெயிட்டிங் தலைவா. நீங்க இப்படியே பல படங்கள் நடிச்சு மக்கள் மனசை ஆட்சி செஞ்சுக்கிட்டு இருக்க வாழ்த்துகள்.

இப்படிக்கு,
நீங்கள் அரசியலுக்கு வந்ததை ஏற்றுக்கொள்ளாத ஒரு ரசிகன்.