முதுமலை – பண்டிப்பூர் வனச் சரணாலயங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் புகழ்பெற்றவை. தமிழக அரசு முதன்முதலில் முதுமலையில்தான் கும்கி யானைகள் முகாமை ஏற்படுத்தியது. முதுமலை வனத்தில் நிலவும் கால நிலை, யானைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆயிரக்கணக்கான யானைகள் முதுமலை, பண்டிப்பூர் வனச் சரணாலயத்தில் வாழ்கின்றன. கோயில் யானைகளுக்கும் முதுமலையில்தான் 5 வருடங்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது.
உதகை- மைசூர் தேசிய நெடுஞ்சாலையும் முதுமலை, பண்டிப்பூர் வனச்சரணாலயங்களுக்கிடையேதான் செல்கிறது. இந்தச் சாலை போக்குவரத்து மிகுந்தது. வனச்சரணாலயத்துக்குள் நுழைந்ததும் வாகனங்கள் குறைவான வேகத்தில்தான் செல்ல வேண்டும். சாலை ஓரத்தில் யானைக்கூட்டம் மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
சாலையை யானைக் கூட்டங்கள் கடப்பதும் இரு புறமும் வாகனங்கள் நிற்பதும் இந்தப் பகுதியில் வாடிக்கையான நிகழ்வு. யானைக் கூட்டங்கள் சாலையைக் கடக்கும்போது, குட்டி யானைகள் தாய் யானையின் காலுக்குள் நடந்து வரும். அண்மையில், வன உயிரின புகைப்படக் கலைஞர் எம்.எஸ்.அகில் ராஜ், முதுமலைக்குச் சென்றபோது, தாய் யானையுடன் வந்த குட்டி யானைஒன்று துள்ளிக் குதித்து சாலையைக் கடப்பதை தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். இரு வாகனங்களுக்கு இடையே, குட்டி யானை புகுந்து ஓடும் காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது.