உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா (Solar Park) அமைத்து சாதனை படைத்துள்ளது கர்நாடகா அரசு.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், பாவகடா என்ற இடத்தில் சுமார் 13,000 ஏக்கரின் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘சக்தி ஸ்தலா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் துவக்கி வைக்கப்பட்டது.
‘சக்தி ஸ்தலா’ பற்றி பேசிய சித்தராமையா ‘கர்நாடகா சோலார் பவர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் (KSPDCL) கீழ் இந்த மின்சக்தி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா என்பது மட்டும் இதன் சிறப்பல்ல. இந்தப் பூங்கா ஒரு இன்ச் நிலம்கூட கையகப்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை இத்திட்டத்துக்கு வாடகைக்கு வழங்கியுள்ளனர். மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது வறட்சி பாதித்த இடம் என்பதால் அப்பகுதி விவசாயிகள் போதிய விளைச்சல் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களிடமிருந்து நிலங்களை வாடகைக்குப் பெற்றுள்ளது கர்நாடகா அரசு. ஓர் ஏக்கருக்கு 21,000 ரூபாய் வாடகைத் தொகையாக வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வாடகை தொகை 5 சதவிகிதம் உயர்த்தப்படும். இத்திட்டத்தால் மொத்தம் 2,300 விவசாயிகள் பயனடைவார்கள். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்’ என்றார்.