`என்னை யாருக்குமே அடையாளம் தெரியலை’ – ரயில் பயண அனுபவம் சொல்லும் கிரிக்கெட் வீரர்!

இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர், மும்பை ரயிலில் சென்றபோது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஷர்துல் தாகூர்

மகாராஷ்டிரா மாநிலம் பல்ஹர் பகுதியைச் சேர்ந்தவர், இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர். முதல் தரப் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடிய இவர், சிறப்பாகச் செயல்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். இதில், சிறப்பாகப் பந்துவீசிய அவர், கடைசிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவினார். இதேபோல டி20 தொடரிலும் சிறப்பாகப் பந்துவீசியதால், அடுத்து நடைபெற உள்ள முத்தரப்புத் தொடரிலும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய அவர், பல்ஹர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல மும்பை மின்சார ரயிலில் பயணித்துள்ளார். வழக்கமாக  அதில் சென்று வந்தாலும், இந்த முறை அவருக்கு சுவாரஸ்யமான சம்பவம்  ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ரயிலில் பார்த்தபோது நான்தான் ஷர்துல் என்பதை சிலர் நம்பவில்லை. சில மாணவர்கள், கூகுளில் என் படத்தைப் பார்த்துவிட்டு, என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்பின்தான், நான் யாரென அடையாளம் கண்டனர். பலரும், கிரிக்கெட் வீரர் நம்முடன் பயணிக்கிறார் என ஆச்சர்யப்பட்டனர். ஆனால், கல்லூரிக் காலத்தில் இருந்து பலமுறை இந்த ரயிலில் பயணம்செய்துள்ளேன். மும்பை மற்றும் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பு, மக்கள் என்னிடம் சில கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் என்னை கிண்டல் செய்வார்கள். ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான், கிரிக்கெட்டிற்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன், அதே சமயத்தில், என் பட்டப்படிப்பை முடித்தேன்” என்றார்.