நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள வேலாகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை. இவருடைய மகன் மணி (வயது 25), கூலி தொழிலாளி.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமியின் மகள் சுகன்யாவிற்கும் (24) கடந்த 19-ந்தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர் 21-ந்தேதி மணி வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை பூசாரி பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் மர்மமான முறையில் மணி இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கும், பரமத்திவேலூர் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் காணப்பட்ட மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 2 நாட்களிலேயே மணி இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம் புகார் கூறினர்.
இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் மணி இறந்ததற்கான காரணங்கள் குறித்த சில உருக்கமான தகவல்கள் கிடைத்தன.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மணி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சில நேரங்களில் அவர் வீட்டை விட்டு வெளியூர்களுக்கு அடிக்கடி சென்று விடுவார். பெற்றோர் தேடி கண்டுபிடித்து அவரை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். இந்த சம்பவம் அடிக்கடி நேர்ந்தது.
மகனுக்கு ஏற்பட்ட இந்த மனநல பாதிப்பை குணப்படுத்த வைத்தியர் மற்றும் பெரிய, பெரிய ஆஸ்பத்திரிகளில் அவரை காண்பித்து பெற்றோர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.
மன நலம் பாதிப்பு சரியானதை தொடர்ந்து மகனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மணிக்கும், அதே ஊரை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இரு குடும்பங்களில் விருப்பப்படி அவர்களுக்கு இந்த திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலிரவு அன்று மணிக்கு ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் பயத்தின் காரணமாக அவரை முதலிரவுக்கு சுகன்யா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் கோபம் அடைந்த மணி வேகத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார். முதலிரவுக்கு மனைவி தன்னை அனுமதிக்காததால் இனிமேல் உயிரோடு இருப்தை விட சாவதே மேல் என முடிவு செய்து பூச்சிக் கொல்லி மருந்து எடுத்து குடித்து தற்கொலை கொண்டார். அவர் விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. சுகன்யாவுக்கும் இந்த திருமணத்தில் விரும்பம் இல்லை என்றும் எங்களுக்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.