அரசியல் குத்துக்கரணம்! கொழும்பில் பரபரப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் 7ம் திகதி மகிந்த அணியில் இணைவதற்குரிய பேச்சுகளை முன்னெடுத்து வருவதால் கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பசில் ராஜபக்சவுடன் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றை 5ஆம் திகதிக்குள் நடத்தவுள்ளார். அதன்பின்னரே அரசியல் குத்துக்கரணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டு அரசுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி எதிர்வரும் 7ம் திகதி மாலை நுகேகொடையில் போராட்டத்தையும், மக்கள் சந்திப்பையும் நடத்தவுள்ளது.

இதன்போதே சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தாமரை மொட்டு அணியுடன் சங்கமிக்கவுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் இரகசியமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால் கூட்டரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் என்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மகிந்த அணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்திக்குழுவின் ஆதரவுடன் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு, தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியிலும் சுதந்திரக் கட்சி இறங்கியது.

எனினும், சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதால் தனியாட்சி அமைக்கும் முயற்சி கைகூடவில்லை.

இந்நிலையில், எதிரணியில் அமர்வதற்கு வாய்ப்பளிக்குமாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். எனினும், பொறுமை காக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சி மோதலும் வலுத்து வருகின்றது. கட்சியின் பொதுச் செயலரும், தேசிய அமைப்பாளருமே பகிரங்கமாக மோதிக் கொள்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கூட்டு அரசிலிருந்து வெளியேறுவதற்கு சுதந்திரக் கட்சியின் குழுவொன்று தயாராகி வருகின்றது.அதேவேளை, இவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றது.

கூட்டரசுக்குள் சுதந்திரக் கட்சியின் கை ஓங்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதன் பிரகாரமே பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ சபையை ஜனாதிபதி கலைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.