கலர்ஸ் சேனலின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் வாயிலாக, தன் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் பிஸி ஆகிவிட்டார் நடிகர் ஆர்யா.
ஆடல், பாடல், ரொமான்ஸ், கேம்ஸ், அட்ராக்டிவ் காஸ்டியூம் என நிகழ்ச்சி முழுக்கவே கலர்ஃபுல். அதேசமயம், ‘இரு மனம் புரிந்துகொள்ளும் நிகழ்வை, உலகமே பார்க்கச் செய்வதா?’ என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. நிகழ்ச்சிக்கான வரவேற்பு, விமர்சனங்கள் குறித்து பேசுகிறார், இயக்குநர் பிரகாஷ்.
“இந்த நிகழ்ச்சிக்கான ஐடியா எப்படி உருவாச்சு?”
“ஆர்யாவும் கலர்ஸ் சேனல் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் சாரும் நெருங்கிய நண்பர்கள். ஆர்யா கல்யாணம் செய்துக்க முடிவெடுத்ததும், அது மறக்கமுடியாத மெமரீஸாக இருக்கணும்னு முடிவெடுத்தாங்க.
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் ஐடியா உருவாச்சு. வரன் தேட முடிவெடுத்ததும், ‘என் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் இருக்கேன். விருப்பமுள்ளவங்க கால் பண்ணுங்க’னு ஆர்யா ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
ஒரு வாரத்திலயே ஒரு லட்சம் பெண்களுக்கு மேல போன் பண்ணினாங்க. எல்லோருக்கும் மெசேஜ் மூலமாக ஒரு லிங்க் அனுப்பினோம்.
அதில், ஒவ்வொரு பெண்ணும் தங்களைப் பற்றி விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்பினாங்க.
இறுதியா நடந்த நேர்முகத்தேர்வில் ஏழாயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. டாக்டர், ஐடி ஊழியர், மாடல் எனப் பல துறையைச் சார்ந்த 16 பெண்கள் இறுதியில் தேர்வுச் செய்யப்பட்டாங்க.
ஆறு பேர் தமிழகப் பெண்கள். மற்றவர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவங்க. இந்த புராசஸின் தொடக்கம் முதலே எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்லிட்டோம்.”
“செலக்ஷன் புராசஸில் பெண்களின் குணநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா?”
“நிச்சயமாகக் கொடுக்கப்பட்டது. ‘தேர்ந்தெடுத்த 16 பெண்களுமே ஹைஃபை ரேஞ்சுல இருக்காங்க’னு நிறைய கமென்ட்ஸ் வருது. அது முற்றிலும் உண்மையில்லை.
மிடில் கிளாஸ் பெண்களும் இருக்காங்க. பல லட்சம் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி. கலர்ஃபுல் தன்மையுடன் நகரும் ரியாலிட்டி நிகழ்ச்சி.
பொதுவா, கல்யாணம்ங்கிறதே இம்ப்ரஸ்தானே. அதனால் எல்லாப் பெண்களும் கலர்ஃபுல் மேக்கப், காஸ்டியூம் பயன்படுத்தறாங்க. ஆனால், அவங்க குணநலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே தேர்ந்தெடுத்திருக்கோம்.”
“நிகழ்ச்சியை ஏன் ஜெய்ப்பூரில் நடத்தறீங்க?”
“சென்னை உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடத்தினால் அதிகக் கூட்டமும், ஷூட்டிங் எடுக்கிறதில் சிக்கலும் உண்டாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் அரண்மனைகளில் ஆடம்பரமான கல்யாணம் நடக்கிறது வழக்கம். அதனால், அமைதி மற்றும் ஆடம்பரத்துக்காக ஜெய்ப்பூரின் முண்டோடா (Mundota) அரண்மனையைத் தேர்வுசெய்தோம்.
இங்கே 150 பேர்கொண்ட டீம் வேலை செய்யறோம். மும்பை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு காஸ்டியூம் டிசைனர்ஸ் இருக்காங்க.
ஆர்யா மற்றும் 16 பெண்களுக்கும் ஏற்ற டிரஸ் மற்றும் அக்சசரீஸை தேர்வுசெய்து நிகழ்ச்சியை ரிச் லுக்குக்குக் கொண்டுபோறதில் இவங்க பங்கு அதிகம்.”
“எலிமினேஷன் புராசஸ் எப்படி நடக்கும்?”
“இது முழுக்கவே, ஆர்யாவின் லைஃப் ஈவன்ட். அவர் தனக்குப் பிடிச்ச லைஃப் பார்ட்னரைத் தேர்வுசெய்வது நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆர்யாவும் 16 பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் இம்ப்ரஸ் செய்வாங்க. ஆனா, எதுவுமே டாஸ்காக இருக்காது.
ஒவ்வொரு கால இடைவெளியில் ஒரு பெண் எலிமினேட் ஆனால்தான், ஃபைனலுக்கு வரமுடியும். அது ஃபிக்ஸடாக நடக்காது. ஒரு வாரம் அல்லது பத்து நாள் எனத் தனக்குத் தோணும் நேரங்களில், ஆர்யா எலிமினேசனை நடத்துவார்.
ஒருவர் அல்லது பலரையும்கூட ஷார்ட் லிஸ்ட் செய்வார். அதுக்கான காரணத்தையும் தெளிவுப்படுத்துவார்.
ஏப்ரல் மாதம் வரை ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட் நடக்கும். கல்யாணம் என்பது, குடும்ப நிகழ்வு சார்ந்தது.
அதனால், நிகழ்ச்சியின் கடைசி 10 நாள்களில் இறுதிச் சுற்றில் இருக்கும் பெண்கள், ஆர்யாவின் வீட்டுக்குப் போவாங்க. ஆர்யாவும் ஒவ்வொரு பெண்கள் வீட்டுக்கும் போவார்.
இப்படி ஒருவர் மற்றொருவர் குடும்பத்துடன் பழகுவாங்க. கருத்து ஒற்றுமைகளைப் பார்ப்பாங்க. ஏப்ரல் இறுதியில் தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணைத் தேர்வுசெய்து, அவரை ஆர்யா கரம்பிடிப்பார்.”
“நிகழ்ச்சியில் தொகுப்பாளினி சங்கீதாவின் பங்கு என்ன?”
“சுயம்வர நிகழ்வை, ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவது, நடிகை சங்கீதாவின் கலகலப்பான தொகுப்புதான்.
ஆர்யா மற்றும் பெண்கள் மனசுல என்ன இருக்குங்கிறதை வெளிக்கொண்டுவரும் பொறுப்பு அவங்களுடையது.
அவங்களுக்கே ஒவ்வொரு எபிசோடிலும் என்ன நடக்கப்போகுதுனு தெரியாது. அவங்க வந்த பிறகுதான் சொல்வோம். ஒவ்வொரு எபிசோடிலும் நடப்பது எல்லாமே ரியல்தான். எதுவுமே ஸ்கிரிப்ட் கிடையாது. அடிக்கடி செலிப்ரிட்டிகளும் வருவாங்க. உளவியல் ஆலோசகர்களும் வந்து பேசுவாங்க.”
“இரண்டு மனங்கள் பேசி புரிஞ்சுக்கும் விஷயத்தை, ஊர் அறியப் பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவது ஏற்புடையதா?”
“கல்யாணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு. அதை மறக்கமுடியாத செயல்பாடாக மாற்ற, ஒவ்வொருத்தருக்கும் பல புதுமையான வழிகளைச் செய்வோம்.
வானத்தில் பறந்தபடி கல்யாணம், கடலுக்குள் கல்யாணம், டன் கணக்கில் பூக்களைத் தூவி கல்யாணம் என உலகம் முழுக்க நடக்குது.
கல்யாணம் என்றாலே ஆடல், பாடல், ரொமான்ஸ், வெரைட்டியான போட்டோ ஷூட், ஃபன் இருக்கும். இவை எல்லாமும் கலந்ததுதான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி.
‘நம்ம வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்து ஊரே ஆச்சர்யப்படணும்’னு பலரும் சொல்லுவாங்க. இதுபோன்ற ஃபேன்டஸியை, கிராண்ட் ஃபேன்டஸியா மாற்றிப் பார்க்க ஆர்யா விருப்பப்பட்டார்.
அது அவரின் விருப்பம். கோடிக்கணக்கான பேர் தன் வாழ்க்கைத் துணைக்கான தேடல் நிகழ்வைப் பார்க்கப்போறாங்கனு தெரிஞ்சும் ஆர்யா சம்மதிச்சார். அவரின் தைரியத்தைப் பாராட்டணும்.”
“ஆர்யாவின் இடத்தில் ஒரு நடிகை இருந்திருந்தால், எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்திருக்குமே…”
“இது முழுக்க முழுக்க ஆர்யா மற்றும் 16 பெண்களைச் சார்ந்த நிகழ்ச்சி. இதில், கலாசாரம், ஒழுக்கம் எங்கே தவறா சித்திரிக்கப்படுது? ‘ஓர் ஆண் என்பதால்தானே, பல பெண்களிலிருந்து ஒருவரை தேர்வுசெய்றீங்க.
பல ஆண்களிலிருந்து தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தேர்வுசெய்ய இந்தச் சமூகம் ஒத்துக்குமா?’னு கேட்கிறாங்க.
அப்படிச் செய்தாலும் தவறில்லையே. ஆர்யாபோல, ஒரு நடிகை தன் வாழ்க்கை துணையைத் தேர்வுசெய்ய முன்வந்தால்… நிச்சயம் அடுத்த சீசனில் அதுக்கான தேடலை தொடங்குவோம்.”