கூட்டு அரசின் ஏமாற்று வித்தை..!

காணமல்போனோர் பணியகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற சட்டவரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 19 மாதங்களின் பின்னர், அதாவது சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் அதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மிகையான தாமதத்துக்குப் பின்னர், தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றும் செயல் என்றும் எண்ணத் தோன்றுகிறது. நிகழ்கால அரசியல் நகர்வுகளும், நடைமுறைகளும் அதுவாகவே அமைந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 37வது கூட்டத்தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இலங்கை தொடர்பில் 32 பக்க மாநாடுகளும் விரைவில் நடைபெறவுள்ளன.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற 35ஆவது மாநாட்டின் போது போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த, அல்லது காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தைக் கொடுத்திருந்தது ஐக்கிய நாடுகள் சபை.

இதனால் நடப்பு வருட மாநாட்டில் இலங்கை மீது கேள்விக் கணைகள் பாய்வதற்கு வாய்ப்புக்கள் மிகையாகவே உள்ளன. பன்னாட்டுச் சமூகம் இலங்கை மீது கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

அவற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கானதொரு எத்தனமே, காணாமல்போனோர் பணியகத்துக்கான இந்த அவசர நியமனங்கள் என்றும் கொள்ள முடியும்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கான நியமனங்கள் தொடர்பில் தமிழர் தாயக மக்கள் பெரியளவில் அலட்டிக்கொள்ளவில்லை. இது கூட்டு அரசின் ஏமாற்றுவித்தை என்பது தான் அவர்களின் நிலைப்பாடு.

இதையே நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் வெளிப்படுத்தியுள்ளார்.

காணாமல்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கான நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு எதற்காகச் செயற்படப் போகிறது என்பது தொடர்பில் ஜனாதிபதிர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டு அரசிடம் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

எங்கும் தேடிப் பார்த்தாயிற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை. அவர்களைத் தடுத்து வைத்ததாகக் குறிப்பிடப்படும் இடங்களும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற பொருள்படவே நாட்டின் இரு உயர் அதிகாரத் தரப்புக்களும் தெரிவித்துள்ளன. எனின், அமைக்கப்பட்டுள்ள அலுவலகமும், அதற்கான நியமனங்களும் இறந்தவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதைக் கண்டறியவா? என்பதே தமிழ் மக்கள் மனங்களில் ஆழ வேரூன்றியுள்ள கேள்வியாக அமைந்துள்ளது.

அவ்வாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதைத்தான் இந்த ஆணைக்குழு கண்டறியப் போகிறது என்றால், குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுக்கு தண்டனை கிடைக்குமா?,

ஆம் எனின், எத்தகைய தண்டனை கிடைக்கும், பன்னாட்டுச் சமூகத்தின் முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்படுவார்களா? என்பது தொடர்பிலும் கூட்டு அரசு தெளிவுபடுத்துதல் அவசியம்.

அதேநேரம், காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக அறிவிக்கும் சட்டவரைபு நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், குறைந்த பட்சம் விவாதத்துக்குக் கூட இன்னும் அது எடுத்துக் கொள்ளப்படாமல் இரண்டு தடவைகள் விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.