இந்தியாவில் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதே எனது வாழ்க்கை லட்சியம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
விராட் கோலி தலைமையின் கீழ் கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அவரும் தனது ஆட்டத்திறனை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறார். இதனால் அவருக்கான கிராப் உயர்ந்துகொண்டே வருகிறது. இதற்கிடையே, ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கோவா அணியின் இணை உரிமையாளராக உள்ளார் கோலி. தற்போது தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்துவிட்டதாலும் இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாலும் அவர் தற்போது ஐ.எஸ்.எல் போட்டிகளைக் கண்டுகளித்து வருகிறார். கடந்த 28-ம் தேதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கோவா அணி வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கோலி அளித்த பேட்டியில், “என்னுடைய வாழ்க்கை லட்சியம் இந்தியாவில் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே. எல்லா விளையாட்டுகளும் மக்களுக்குத் தெரிய வேண்டும். எல்லா விளையாட்டுக்கும் மக்கள் சம உரிமை அளிக்க வேண்டும். அந்தவகையில் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த வேண்டும். நான் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறேன்.
அதற்குக் காரணம் அடுத்த 15 ஆண்டுகளில் கோவாவை கால்பந்து மையமாக மாற்ற முடியும் என்பதுதான். கிரிக்கெட் பிரபலமான அளவுக்கு இந்தியாவில் கால்பந்துப் போட்டி பிரபலமாகவில்லை. இதுபோன்ற பெரிய அளவிலான லீக் போட்டிகள் நடைபெறாததுதான் அதற்குக் காரணம். விளையாட்டை உலக மயமாக்க வேண்டும். தற்போது ஐ.எஸ்.எல் தொடர் நடைபெறுவதால், கால்பந்து குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படும் என நம்புகிறேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இருந்திருந்தால், நான் இந்த இடத்தில் தற்போது இருந்திருக்க மாட்டேன். போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால்தான் நமது திறமைகள் வெளியே தெரிந்தது. மக்களும் எங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்” என்றார்.