மகளை, பெற்றோரே கொன்று உடலை தகனம் செய்த கொடூரம்..!

கர்நாடகா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி பெற்ற மகளுக்கு விஷம் தந்து பெற்றோரே கொலை செய்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லனபீடு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இங்கு குடியிருக்கும் குமார் கவுடா என்பவரின் மகள் சுஷ்மா, வேறு சமுதாயத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இது கவுடா குடும்பத்தினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பல முறை தனது மகளிடம் எடுத்துக் கூறியும், அவர் தமது காதலை விட்டுத்தர மறுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாயத்தாரை கூட்டிய குமார் கவுடா, தமது மகளுக்கு புத்திமதி சொல்ல கோரியுள்ளார். ஆனால் அதிலும் இளம்பெண் சுஷ்மா ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கவுடா குடும்பத்தினர், சுஷ்மாவை மாண்டியா பகுதியில் அமைந்துள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து 3 முறையாக குமார் கவுடா தமது குடும்பத்தாருக்கு இணக்கமான இளைஞர் ஒருவரை மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொருட்டு முயற்சி செய்துள்ளார்.

மூன்று முறையும் சுஷ்மா மறுப்பு தெரிவித்தது கவுடா குடும்பத்தாரை கோபத்தில் தள்ளியது. இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி திருமண பேச்சு ஏதும் எடுக்காமல் மகளை வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் குமார் கவுடா. வீட்டில் வந்த சுஷ்மாவிடம் குடும்ப நிலை தொடர்பில் விவாதித்துள்ளனர்.

அப்போது சுஷ்மாவின் தாயார் பழச்சாறு ஒன்றை சுஷ்மாவுக்கு அளித்துள்ளார். அதை சுவைத்த அவர், சந்தேகத்தில் அது தமக்கு வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஆனால், குமார் கவுடா, அவரது மனைவி மற்றும் உறவினர் கெம்பண்ண ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக விஷம் கலந்த அந்த பழச்சாறை சுஷ்மாவுக்கு அளித்துள்ளனர்.

இரவு பத்தரை மணியளவில் விஷம் தரப்பட்ட சுஷ்மா அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த 6 மணி நேரத்திலும் சுஷ்மா உயிருக்கு போராடியதை குமார் கவுடாவும் அவரது மனைவியும் வேடிக்கை பார்த்தபடியே இருந்துள்ளனர்.

பின்னர் தமது மகள் இறந்ததை உறுதி செய்த குமார் கவுடா, தமது உறவினர் கெம்பண்ணாவுடன் இணைந்து அதிகாலை 5 மணியளவில் உடலை எரியூட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த கிராமத்தில் பரவலாக பேசப்படவே, பொலிசார் விசாரணை செய்துள்ளனர். இதில் குமார் கவுடா தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது இந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட சுஷ்மாவின் தாயார் ஜயந்தி மற்றும் உறவினர் கெம்பண்ண ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர்.