உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது 30). தொழிலாளி. இவருக்கும் சிறுபாக்கத்தை சேர்ந்த சுதாவுக்கும்(29) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தென்னரசு என்ற மகன் உள்ளான். தற்போது சுதா கர்ப்பிணியாக உள்ளார்.
சுதாவுக்கு திருமணத்தின்போது 20 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர். ஆனால் கூடுதலாக பணம் கேட்டு சுதாவை அவரது கணவர் நாராயணனும், மாமியார் தங்கம்மாளும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சுதாவை சிறுபாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நாராயணன் அனுப்பி வைத்துவிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா அங்கிருந்து பாண்டூரில் உள்ள கணவர் வீட்டுக்கு மீண்டும் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 8.15 மணிக்கு சுதாவின் அண்ணன் மணிக்கு நாராயணன் செல்போனில் பேசினார். அப்போது சுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.
உடனே சுதாவின் குடும்பத்தினர் அங்கிருந்து பாண்டூருக்கு விரைந்து வந்தனர். சுதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். சுதாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.
தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, மாணிக்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள். சுதாவின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து அவர்கள் திடுக்கிட்டனர்.
வீட்டின் பின்பக்கத்தில் ரத்தக்கறை படிந்த புடவை, அரிவாள்மனை கிடந்தது. அவைகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
சுதா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுதாவின் மாமியார் தங்கம்மாளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுதா இறந்ததும் அவரது கணவர் நாராயணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.