ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் கொண்ட மாநிலம்?

குஜராத் மாநிலத்தில் 1.11 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத் மாநில சட்டசபையில் அம்மாநிலத்தில் உள்ள ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் எண்ணிக்கை பற்றிய வினா ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துறை அமைச்சர் விபாவரி தவே 1.11 லட்சம் குழந்தைகள் இருப்பதாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:-

குஜராத் மாநிலத்தில் மொத்தம் சுமார் 1.11 லட்சம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 19,980 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஓரளவு பாதிக்கப்பட்ட குழந்தைகள் 29,442 பேர் உள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பரோடா மாவட்டத்தில் பெருமளவில் உள்ளனர். அந்த மாவட்டத்தில் மட்டும் 7,625 குழந்தைகள் உள்ளனர். அடுத்தபடியாக தாகோத் மாவட்டம் 7,419 குழந்தைகளுடன் உள்ளது. அடுத்தபடியாக பானஸ்கந்தா (5,681) மற்றும் சுரேந்திரநகர் (1,144) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தக் குறைபாட்டை போக்க அரசு குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு காலை உணவும் மதிய உணவும் அரசு வழங்குகிறது. மேலும் வாரத்துக்கு இரு நாட்களுக்கு பழங்கள் வழங்கப்பட் டு வருகின்றது என்றார்.