2003 உலககிண்ண இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கும் டோனி இருந்திருந்தால் :சௌரவ் கங்குலி

நான் தலைமை ஏற்று இருந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை அணியிலேயே மகேந்திரசிங் தோனி இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன் என்று சவுரவ் கங்குலி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

உலகக் கிரிக்கெட்டில் இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைமை என்று கணக்கில் கொள்ளும்போது, கங்குலி, எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இவர்களின் பங்கு அதிகமாக இருந்துள்ளது. அந்த வகையில், முகமது அசாருதீன் தலைமைக்கு பின் கங்குலி தலைமையில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது.

முன்னாள் கேப்டன் கங்குலி தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து சுயசரிதையாக எழுதியுள்ளார். “ஏ சென்சுரி இஸ் நாட் இனஃப் “ என்ற அந்த நூலில் கங்குலி தனது அனுபவங்கள் குறித்தும், வீரர்கள் குறித்தும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.அந்த வகையில், மகேந்திர சிங் தோனி குறித்து கங்குலி குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு நாக்பூரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கங்குலி கடைசி டெஸ்டில் விளையாடினார். அப்போது, அந்த போட்டிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க செயல்பட வேண்டும் என்று தோனி கேட்டுக்கொண்டார் என்று கங்குலி குறிப்பிட்டு இருந்தார்.இந்நிலையில், 2004ம்ஆண்டுதான் தோனி இந்திய அணியில் இடம் பெற்று இருந்தாலும், அவரின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேரி வருவதைப் பார்த்த கங்குலி தனது 2003ம் ஆண்டு உலகக்கோப்பை அணியிலேயே தோனி இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன் எனத் தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து கங்குலி தனது நூலில் குறிப்பிடுகையில்: ஒவ்வொரு போட்டியின் போதும், வீரர்கள் எவ்வாறு நெருக்கடியான நேரத்தில், அதை சமாளித்து விளையாடுகிறார்கள் என்பதை நான் அடிக்கடி கவனிப்பேன். ஒரு கேப்டனாக அது எனக்கு முக்கியம்.எனக்கு தோனியை 2004ம்ஆண்டில் இருந்துதான் தெரியும். ஏனென்றால் அப்போதுதான் அணிக்குள் தோனி அறிகமுகமாகிறார். ஆனால், தோனியின் விளையாட்டை நான் கவனித்தபோது, நாளுக்குநாள், அவரின் திறமையை மெருகேறி வந்தது. இதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரின் விளையாட்டும் எனக்கு பிடித்துப்போனது.2003ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலகிலேயே தலைசிறந்த அணியாக இந்திய அணி திகழ்ந்து வந்தது.

ஆனால், 2003ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் மட்டும் தோனி அணியில் இருந்திருந்தால், இறுதிப்போட்டியின் முடிவு நிச்சயம் மாறி இருக்கும். நாம் உலகக்கோப்பையை கைப்பற்றி இருப்போம். ஆனால், அணிக்குள் தோனி 2004ம் ஆண்டுதான் அறிமுகமானார்.

என்னைப் பொறுத்தவரை 2003ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியல் தோனி இடம் பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று விரும்பினேன். ஆனால், அந்த நேரத்தில் இந்தியன் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றிக் கொண்டு இருந்தார்.தோனியை பற்றி நான் மதிப்பிட்ட அனைத்து விஷயங்களும் சிறப்பாக, சரியாக நடந்துள்ளன. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. அனைத்து விதமான சாதனைகளையும் உடைத்து, இப்போது தோனி சிறந்த வீரராகத் திகழ்கிறார்.

நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் போது என்னை அணிக்கு தலைமை ஏற்க தோனி கேட்டுக்கொண்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். ஆனால்,2-வது முறையாக தோனி என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை.தோனியின் வேண்டுகோளை ஏற்று 3 ஓவர்கள் மட்டுமே கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டேன். ஆனால், என்னால் கவனம் செலுத்தும் அளவுக்கு மனமில்லை.

அதன்பின் தோனியை அழைத்து கேப்டன் பொறுப்பு உங்களுடையது, உங்கள் பணி, நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். இதைக் கேட்டு தோனி கடைசியாக புன்னகையை மட்டும் பதிலாக அளித்தார்.இவ்வாறு கங்குலி தனது நூலில் தெரிவித்துள்ளார்