யாழ்ப்பாணத்தில் புகையிலையைப் பயன்படுத்துவதால் வாய்ப் புற்று நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகின்றனர்.
புற்றுநோயைக் கட்டுப்படுத்தவே இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் புகையிலை விற்பனையாளர்களின் பிரச்சினை தொடர்பாகப் பேசப்பட்டது. அதன்போது பணிப்பாளர் மேலும் தெரிவித்தாவது:
யாழ்ப்பணத்தில் பொதுச் சந்தைகளிலும், கடைகளிலும் மெல்லுவதற்கு புகையிலையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
புகையிலையை புகைப்பவர்களை விட வாயில் மெல்பவர்களுக்கே புற்று நோயின் தாக்கம் அதிகளவில் ஏற்படுகின்றது.
நாம் மனிதாபிமான அடிப்படையில் சிறு தொழிலாளிகளை பார்த்தால் எமது மாவட்டத்தில் வாய்ப் புற்று நோயாளர்களின் எண்ணிகையில் அதிகரிப்பே ஏற்படும். எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே சில இறுக்கமான நடைமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றோம் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா கருத்து தெரிவிக்கையில்:
புகையிலை செய்கையாளர்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கை நடைமுறைப்படுத்தப்படும் வரை யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகளில் கடைகளில் புகையிலை விற்பவர்களுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது.
கொழும்பு அரசு 2020 ஆம் ஆண்டு புகையிலைச் செய்கையை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்று அறிவித்ததுடன் விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர்ச் செய்கையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று கூறியது.
ஆனால் பின்னர் இடம்பெற்ற அமைச்சு மட்டக் கூட்டத்தில் புகையிலைச் செய்கையாளர்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கையை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை அவர்கள் புகையிலை விற்பனை செய்ய முடியும் என்று கூறியிருந்தது.
எனவே எமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வேலையை சுகாதார உத்தியோகத்தர்கள் செய்யாதீர்கள் என்றார்.
அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுச் சந்தைகளில் வாயில் உமிழும் புகையிலை விற்பவர்களையே இனங்கண்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.
உமிழும் புகையிலையை விற்பனை செய்வதாலும் அதனை வாங்கி உண்பவர்கள் வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அதிலும் அதிகளவான வாய்ப் புற்று நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணமே விளங்குகின்றது என்றார்.