காதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா, தவிக்கும் இளம்பெண்!

(அசாதாரண வாழ்க்கைச் சுழல்களில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் பற்றிய  உண்மைக் கதை).

பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைப் பாதையை எப்படித் தேர்வு செய்துகொள்வது? அன்பை எப்படிப் பெறுவது?

சுவையற்ற உணவும் பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன்படாமல் இருந்தேன்.

குழந்தையாக இருக்கும்போதே எனது பெற்றோரால் கைவிடப்பட்டவள் நான்.

எனது பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

இல்லை, இல்லை. நான் அனாதை இல்லை. அது மிகவும் வேதனைக்குரியது.

எனது பெற்றோர் உயிரோடுதான் இருக்கிறார்கள்; நான் வாழும் அதே கிராமத்தில்தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேற்று நபர் போல் நடந்துகொள்வார்கள்.

பசி வந்தால் கீச் என்று சிரிப்பேன் அல்லது வீல் என்று அழுவேன்; அப்போது தாலாட்டுப் பாடி என்னை தூங்கவைக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நான் தொட்டிலில் படுத்துக்கொண்டிருந்தபோதே என்னை தனியாக விட்டு விட்டு போக அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

எதையோ இழந்துவிட்டோம் என்று கவலைப்படக் கூட தெரியாத வயது அது. இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கும், அவளுடைய குழந்தைகளைக் பெறுவதற்கும், நான் பிறந்த உடனேயே என் தந்தை என் தாயை விட்டுச் சென்றார்.

பிறகு என் தாயும் என்னை விட்டுச் சென்றார்; அவருக்கும் ஒரு ஆண் மீது காதல் பிறந்தது.

ஆனால் எனக்கு? அன்பு என்றால் என்ன என்று தெரிந்தால் தானே அதை நான் இழப்பதற்கு!

என் தாய்மாமா வீட்டில் நான் பரிதாபத்தோடு வளர்க்கப்பட்டேன். புரிந்து கொள்ளப் போதுமான வயது வந்தபோது அவர்தான் எனக்கு என் பெற்றோரைக் காட்டியவர். சோகம் நிறைந்த கண்களுடன் அவர்களை நான் பார்த்தேன்.

என்னை அருகில் இழுத்து கட்டி அணைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், முகம் தெரியாத ஒரு நபரைப் பார்ப்பது போல் அவர்கள் என்னைப் பார்த்தனர்.

நான் யாருடைய குழந்தையும் இல்லை என்பது தெளிவதாகத் தெரிந்தது. அதனால் எனது மாமா ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வந்த விடுதியில் என்னைச் சேர்த்தார்.

அங்கு ஒரு முரட்டுத்தனமான அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது குறித்து எனக்கு தெரியாது.

எனது தந்தைக்கும் அவரது இரண்டாம் தாரத்திற்கும் பிறந்த பெண்ணையும் எனது தந்தை நான் வசித்துவந்த அதே விடுதியில்தான் சேர்த்திருந்தார்.

_99772230_3_padma_illustration2  காதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா, தவிக்கும் இளம்பெண்!! 99772230 3 padma illustration2ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும்போது நான் தேவையில்லாதவளாக ஒதுக்கப்பட்டதுதான் நினைவுக்கு வரும்.

அவள்மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாங்கள் அடிக்கடி பேசிகொள்வோம். நான் யாரென்பது அவளுக்குத் தெரியும். அவளுக்கு நிச்சயம் தெரியும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் இது மிகுந்த வலியைத் தந்தது.

எனது தந்தை அவளை அடிக்கடி பார்க்க வருவதோடு விடுமுறை நாட்களில் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

என்னையும் உடன் அழைத்துச் செல்வாரா என்று நான் மெளனமாகக் காத்திருப்பேன். ஆனால் என்னுடைய காத்திருப்பு எப்போதும் வீணாகிப்போய்விடும்.

அவர் என்னைப் பார்க்கக்கூட மாட்டார். ஒருவேளை அவருக்கு என் மீது அன்பு இருக்கிறதா, இல்லை என்னுடைய சித்தி என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துவர அனுமதிப்பாரா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.

அவர்கள் பார்வையில் படாதபடி நான் தனியாகச் சென்று அழுவேன். மற்ற குழந்தைகளைப் போல் விடுமுறை நாட்களை நான் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் விடுமுறை என்றால் பணம் சம்பாதிக்க வயலில் வேலை செய்யவேண்டும். இல்லையென்றால் எனக்கு சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் நான் கால்நடைகள் மேய்க்கக்கூட செய்வேன்.

_99772232_3_padma_illustration3  காதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா, தவிக்கும் இளம்பெண்!! 99772232 3 padma illustration3

நான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் என் தாய்மாமாவின் குடும்பத்திற்கு கொடுத்துவிடுவேன்.

இதற்கு பதிலாக அவர்கள் எனக்கு உணவும் தங்க இடமும் கொடுக்கிறார்கள்; பள்ளிக்கூடம் திறந்த பிறகு பேனா, பென்சில் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ள சிறிது பணத்தை சேமிக்கவும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இன்னமும் நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை.

அவர்களின் அன்பிற்காக நான் ஏங்குகிறேன். பண்டிகைகளை அவர்களுடன் கொண்டாட வேண்டும் என்பது என் கனவு. ஆனால், அவர்களுக்கென ஒரு வாழ்க்கைத் துணையும் தனிக் குடும்பமும் இருக்கிறது.

எனது தோழிகள் சொல்லும் கதைகளை நான் ரசித்துக் கேட்பேன். எனது கனவே அவர்களது விடுமுறைகள் பற்றிதான். எனது தோழிகள்தான் நான் எனது சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் எனது உண்மையான சகோதரிகள்.

அவர்களை முழுவதும் நம்பி எனது உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்; நான் வாழ்க்கையில் தனியாக எதிர்நீச்சலடித்து சோர்வடைவதைப்போன்று உணரும்போது அவர்கள் என்னை பாசமுடன் பார்த்துக்கொள்கிறார்கள்.

என்னுடைய விடுதிப் பாதுகாவலரைத்தான் எனது உண்மையான தாயாக நினைக்கிறேன். அவரிடம்தான் ஒரு தாயின் அன்பை கண் கூடாக கண்டேன்.

என்னுடைய சக நண்பர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களின் குடும்பத்தாரை விடுதிப் பாதுகாவலர் அழைப்பார். ஆனால், எனக்கோ அவர்தான் என் குடும்பமே.

அவரால் முடிந்ததை அவர் செய்கிறார். அவர் எனக்கு சிறந்த ஆடைகளை அளிக்கும் தருணத்தை சிறப்பாக உணருகிறேன். ஒருவரால் நேசிக்கப்படும்போது ஏற்படும் உணர்வை என்னால் புரிந்துகொள்ள இயலுகிறது.

ஆனால், ஒருவர் பொதுவாக வாழ்க்கையில் சந்திக்க விருப்பப்படும் சில மகிழ்ச்சிகரமான விஷயங்கள் இல்லாமலும் வாழ்வதற்கு நான் கற்றுக்கொண்டுள்ளேன். உதாரணமாக எனக்கு பிடித்த உணவை சமைத்துத் தருமாறு என்னால் யாரிடமும் கேட்க முடியாது.