அஷ்ரப் மரணத்துக்கான காரணம் – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம்!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.

2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் நாள், அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி ஊரகந்த பகுதியில் மலையில் விபத்துள்ளானது. இந்தப் சம்பவத்தில் அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் மரணமடைந்தனர்.

இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருந்து வந்தது. அஷ்ரப் மரணமான,  உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக ஆராய,  மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வீரசேகர தலைமையிலான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை இதுவரையில் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத் பெற்றுள்ளார்.

இதையடுத்து, ஆணைக்குழுவின் கண்டறிவுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி, அஷ்ரப் பயணம் செய்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.

“அமைச்சர் அஷ்ரப்பின் மரணத்துக்கு யாரேனும் ஒருவர் அல்லது குழு காரணமாக இருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.  குண்டுவெடிப்பினால்  அல்லது எந்தவொரு வெடிபொருளினால் இந்த விபத்து நேரிட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று அரசாங்க பகுப்பாய்வாளர், சட்டமருத்துவ அதிகாரி மற்றும் உதவியாளர்கள் ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளனர்.” என்று விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், விமான பராமரிப்பு பணியாளர்களின் அலட்சியம் அல்லது கண்டுகொள்ளாத போக்கு இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

“2000 செப்ரெம்பர் 15ஆம் நாள், பிற்பகல் விமானப்படைத் தளபதியைத் தொடர்பு கொண்ட அஷ்ரப், தனிப்பட்ட முறையில் கல்முனை செல்வதற்கு உலங்குவானூர்தி ஒன்றை ஒழுங்கு செய்து தருமாறு கோரியிருந்தார். விசாரணைக்குழு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, விபத்துக்குள்ளான உலங்குவானூர்தி அந்த நேரத்தில், பழுதடைந்திருந்துள்ளது.

குறித்த உலங்குவானூர்தியை விமானப்படைத் தளபதி எந்த பரிசோதனையுமில்லாமல் அவரது பயணத்துக்கு ஒதுக்கியிருக்கமாட்டார்.

ஏனென்றால், பறப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ள விமானங்களின் பட்டியல் ஒவ்வொரு நாள் காலையிலும் விமானப்படைத் தளபதிக்கு வழங்கப்படுவது வழக்கம்.

செப்ரெம்பர் 15ஆம் நாள் காலை 8.30 மணியளவில்,  பறக்கக் கூடிய நிலையில் இருந்த விமானங்களின் பட்டியலில் , விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியும் இருந்துள்ளது.

ஆனால் உண்மை அதுவல்ல. விமானப்படைத் தளபதி தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்று விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.