மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தனது மனைவியின் திடீர் மரணம் குறித்து, தனது நண்பரும் திரைத்துறை ஆய்வாளருமான கோமள் நத்தாவிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்த உணர்வுகளை, கோமள் நத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதன் முழு விவரம்:
போனி கபூர் பிப்ரவரி 24-ஆம் தேதி துபாய்க்கு மேற்கொண்ட ஆச்சரியப்படுத்தும் பயணம், நடிகை ஸ்ரீதேவியுடனான காதல் வாழ்க்கையில் இன்னொரு ஆச்சரியமாகத்தான் முடிந்திருக்கும்.
ஆனால், 62 வயது திரைப்படத் தயாரிப்பாளருக்கு, அவரது 54 வயது காதல் தேவதையின் இறுதிப் பயணமாகிப் போனது. அவரது வாழ்க்கையின், ஈடுசெய்ய முடியாத அதிர்ச்சியாக மாறிப்போனது.
இருவரும் தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருந்த நேரத்தில், 24 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று ஓர் ஆச்சரியத்தை ஸ்ரீதேவிக்குக் கொடுத்தார் போனி கபூர்.
அவர் மும்பையில் இருந்த நேரத்தில், அவரது சகோதரர் அனில் கபூருடன் பெங்களூரில், மிஸ்டர் பிச்சாரா திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார் ஸ்ரீதேவி.
தூங்காத காதல்
இரவு முழுவதும் ஸ்ரீதேவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் போனி கபூர். அதிகாலையில் படப்பிடிப்பு இருப்பதால் கொஞ்ச நேரம் தூங்கவிடுங்கள் என ஸ்ரீதேவி கெஞ்சியதை அடுத்து உரையாடலை துண்டிக்க சம்மதித்தார்.
ஆனால், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் துங்கி, பிறகு எழுந்து தனது சூட்டிங்கிற்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது ஹோட்டல் அறைக்கு முன்பாக நின்றார் போனி கபூர். ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி.
ஸ்ரீதேவியுடன் தொலைபேசி உரையாடலை முடித்தவுடன் அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு ஓடி, பெங்களூர் விமானத்தைப் பிடித்தார்.
ஸ்ரீதேவியும் அனில் கபூரும் தங்கியிருந்த தாஜ் வெஸ்ட்என்ட் ஹோட்டலுக்கு விரைந்தார். ஸ்ரீதேவி தங்கியிருந்த அதே தரைத் தளத்தில் தனக்கும் ஓர் அறை எடுத்தார்.
அவரது அறையின் அழைப்பு மணியை அழுத்தினார். வந்து பார்த்த ஸ்ரீதேவிக்கு, தனது கண்ணால் காண்பதை நம்ப முடியாத ஆச்சரியம். திரைப்படக் குழுவினருக்கோ, போனியின் வருகைக்கான காரணம் தெரியவில்லை. அனில் கபூரின் விவகாரங்களையும் அவர் கவனித்துக் கொண்டிருந்ததால், அதற்காக வந்திருப்பார் என்று நினைத்தார்கள்.
கடந்த 1994-ல் பெங்களூருக்கு அவர் மேற்கொண்ட திடீர் பயணத்தைப் போன்றுதான் துபாய் பயணமும் அமைந்தது.
பிப்ரவரி 20-ஆம் தேதி நடந்த போனியின் உறவினர் நடிகர் மோஹித் கபூரின் திருமணத்துக்குச் சென்ற ஸ்ரீதேவி, தனது மகள் ஜானவிக்காக, ஷாப்பிங் செய்ய மேலும் இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருக்க முடிவெடுத்தார்.
பிப்ரவரி 22-ஆம் தேதி, லக்னெளவில் ஒரு முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், போனி கபூர் துபாயிலிருந்து வந்துவிட்டார்.
முதல் முறையாக தனியாக வெளிநாட்டில்
ஸ்ரீதேவி தனது மகள் ஜானவியின் ஷாப்பிங் பட்டியலை மொபைலில் பதிவு செய்து வைத்திருந்தார். 21-ஆம் தேதி ஷாப்பிங் செய்ய திட்டம். ஆனால், திருமணம் நடந்த ராஜ் அல்-கய் மா ஹோட்டலில் தனது மொபைலை மறந்து வைத்துவிட்டு வந்ததால் ஷாப்பிங் செல்ல முடியவில்லை.
அதனால் நாள் முழுவதையும் தனது ஹோட்டலிலேயே கழித்தார். 22-ஆம் தேதியும் தனது ஹோட்டல் அறையிலேயே இருந்துகொண்டு, தனது தோழியுடன் அரட்டை அடித்துக் கொண்டு பொழுதைக் கழித்தார்.
இந்தியா திரும்புவதற்கான டிக்கெட்டில் பயணத் தேதியை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்த நாள் போனி கபூர்தான் அந்த வேலையை செய்து முடித்தார்.
“24-ஆம் தேதி காலை அவருடன் பேசினேன்,” என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசினார் போனி. “பாப்பா (இப்படித்தான் ஸ்ரீதேவி போனி கபூரை செல்லமாக அழைப்பார்). நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொன்னேன்.
ஆனால், அன்று மாலை உன்னைச் சந்திக்கப் போகிறேன் என்று அவரிடம் நான் சொல்லவில்லை. ஜானவியும் நான் துபாய் போகும் யோசனையை ஆதரித்தாள்.
ஏனென்றால், தனது தாய் தனியாக இருந்து பழக்கமில்லை என்பதால் அவள் பயப்பட்டாள். தனியாக இருந்தால், பாஸ்போர்ட் அல்லது முக்கிய ஆவணங்களை எங்காவது மறந்து வைத்துவிடுவார் என்றாள்”.
தங்களது கடந்த 24 வருட உறவில், இரண்டு முறை மட்டுமே தனியாக ஸ்ரீதேவி வெளிநாடு சென்றிருப்பதாக போனி நினைவுகூர்ந்தார். ஒரு முறை நியூ ஜெர்ஸிக்கும் இன்னொரு முறை வான்கூவருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார்.
“அப்போது கூட, நான் போக முடியாவிட்டாலும், எனது நண்பரின் மனைவியை உடன் அனுப்பி வைத்தேன்” என்று கூறி, பொங்கிவரும் அழுகையை அடக்க முயன்றார் போனி கபூர். “துபாய்தான், ஸ்ரீதேவி இரண்டு நாட்கள் – பிப்ரவரி 22, 23 – முதல் முறையாக தனியாக ஒரு வெளிநாட்டில் தங்கியிருந்தது”.
துபாய் செல்ல, 24-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி விமானத்தில் டிக்கெட் பதிவு செய்துவிட்டு, விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் ஸ்ரீதேவியிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு.
ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்வதால், அடுத்த சில மணி நேரங்களுக்கு தனது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். ஏனென்றால், தனது காதல் நாயகி பதற்றப்படக்கூடாதல்லவா? கூட்டம் முடிந்தவுடன் தானே அழைப்பதாகவும் கூறிவிட்டார்.
துபாயில் ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் ஸ்ரீதேவி தங்கியிருக்கும் அறையின் முன்பு நின்று `சர்ப்ரைஸ்’ கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டம்.
துபாய் நேரப்படி, மாலை 6.20-க்கு ஹோட்டலைச் சென்றடைந்தார். ஹோட்டல் வரவேற்பறையில் பதிவுகளை செய்துவிட்டு, ஸ்ரீதேவி அறைக்காக ஒரு மாற்று சாவியை வாங்கிவிட்டு, தனது பையை அறைக்குக் கொண்டுவருவதை தாமதப்படுத்துமாறும், தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்புவதாகவும் கூறிச் சென்றார்.
`என் மனசுக்குள்ள தோணிச்சு’
தனது மாற்று சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற போனி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருவரும் டீன் ஏஜ் காதலர்களைப் போல கட்டிப்பிடித்து அன்பைப் பறிமாறிக் கொண்டார்கள்.
“ஆனால், என்னை அழைத்துச் செல்ல நீங்கள் துபாய் வருவீர்கள் என்று என் மனசுக்குள்ள தோணிச்சு என்று சொன்னார்”.
தம்பதிகள் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
போனி தான் தயாராகி, பாத்ரூமில் இருந்து வந்த பிறகு, இருவரும் `ரொமான்டிக் டின்னருக்கு போகலாம்’ என்று சொன்னார்.
ஷாப்பிங்கை நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) வெச்சுக்கலாம் என்றும் ஸ்ரீதேவியிடம் யோசனை சொல்லியிருக்கிறார். 25-ஆம் தேதி இந்தியா திரும்பும் வகையில் மீண்டும் விமான பயணம் மாற்றப்பட வேண்டும்.
அதன்பிறகு, ரொமான்டிக் இரவு விருந்துக்குச் செல்லும் முன்பாக குளித்துவிட்டு வர தயாரானார் ஸ்ரீதேவி. “நான் வரவேற்பறைக்குச் சென்றதும், ஸ்ரீதேவி மாஸ்டர் பாத்ரூமுக்கு குளிக்கச் சென்றுவிட்டார்” என்று போனி சொன்னார்.
வரவேற்பறையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியைப் பார்க்க டி.வி. சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார் போனி. அப்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு இருந்த சானலை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் 15-20 நிமிடங்கள் ஓடிவிட்டது.
அதன்பிறகு அமைதியிழந்தார். சனிக்கிழமை இரவு உணவகங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே 8 மணியாகிவிட்டது. அமைதியிழந்த போனி, வரவேற்பறையிலிருந்தே கூச்சலிட்டார். இரண்டு முறை அழைத்துப் பார்த்தார். பிறகு டி.வி. சத்தத்தை குறைத்தார். அப்போதும் ஸ்ரீதேவியிடமிருந்து பதில் இல்லை.
படுக்கையறைக்குச் சென்று, பாத்ரூம் கதவைத் தட்டினார். பிறகு அழைத்தும் பார்த்தார். உள்ளே பாத்ரூமில் இருந்து குழாயில் தண்ணீர் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
இப்போது இன்னும் சத்தமாக, “ஜான் (காதல்) ஜான்” என அழைத்தார். வழக்கத்துக்கு மாறாக, அப்போதும் பதில் இல்லை. அப்போதுதான் அவருக்குள் பயம் வந்தது. உள்ளே தாழிடப்படாமல் இருந்த கதவைத் திறந்தார்.
பாத் டப் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஸ்ரீதேவி அதில் முழுமையாக மூழ்கியிருந்தார். நொறுங்கிப் போன போனி கபூர், பதற்றத்துடன் ஓடிப்போய் ஸ்ரீதேவியைத் தூக்கினார். ஆனால் ஸ்ரீதேவி அசைவின்றிக் கிடந்தார். எல்லாம் முடிந்துபோய்விட்டதோ என்று நிலைகுலைந்தார் போனி.
ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கிவிட்டார். போனி சுக்குநூறாகிப் போனார். அவரது உலகம் இன்னொரு உலகத்துக்குப் பயணமாகிவிட்டது. இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு, ஸ்ரீதேவிக்கு அவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி, தற்போது அவரது வாழ்க்கையில் மீள முடியாத அதிர்ச்சியாக மாறிப் போனது. சற்று நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
தனது கணவருடன் இரவு விருத்துக்குத் தயாராகச் சென்ற ஸ்ரீதேவி, துரதிர்ஷ்டவசமாக, தனது இறுதிப்பயணத்துக்குத் தயாராகிவிட்டார். அவரது கணவர், குடும்பம், லட்சக்கணக்கான ரசிகர்கள்… யாருமே நடந்ததை நம்பத் தயாராக இல்லை.
அவர் முதலில் தண்ணீரில் மூழ்கி, நினைவிழந்தாரா அல்லது தூங்கிப் போனாரா, மயக்கமடைந்து பிறகு நீரில் மூழ்கினாரா… யாருக்குமே, ஒருவேளை, கடைசி வரை தெரியாமலே போகலாம்.
ஒரு நிமிடம் கூட, தண்ணீரில் போராட வேண்டிய சூழ்நிலையில் அவர் இல்லாமல் இருந்திருக்கலாம். பதற்றத்தில் கையை, காலை உதறியிருந்தார் கொஞ்சம் தண்ணீர் பாத் டப்பில் இருந்து வெளியேறியிருக்கும். ஆனால், டப்புக்கு வெளியே சிறிதளவு தண்ணீர் கூட சிந்தவில்லை.
ஸ்ரீதேவி மரணத்தின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே இருக்கும்.
ஆனால், அது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முக்கியமானதல்ல.
அழகிய நாயகி, லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியை இனி, திரையில் மட்டுமே காண முடியும் என்பதுதான் அவர்களை வருத்திக் கொண்டிருக்கும்.