மைத்திரியிடம் சிக்கிக் கொண்ட மஹிந்த!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் பேசிக்கொண்ட விடயங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சேனாநாயக்கவின் வீட்டில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் போது ஜனாதிபதியிடம் மஹிந்த கோரிக்கை ஒன்று விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என மஹிந்த கேட்டுக் கொண்டுள்ளார்.

“நாங்கள் அனைத்து ஆதரவுகளையும் வழங்குகின்றோம். ரணிலை பிரதமர் பதவியில் வைத்து கொண்டு நீங்கள் இதே முறையில் நடத்திச் செல்லுங்கள், நாங்கள் எந்த முறையிலும் தடை ஏற்படுத்துவதில்லை. எனினும் சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவியை பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம். வழங்கினால் அனைத்து நடவடிக்கைகளும் குழம்பி விடும்” என மஹிந்த, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

தான் ஜனாதிபதியிடம் தற்போதைக்கு விடுக்கும் ஒரே கோரிக்கை இதுவென அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கமைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பதவி பிரமாணம் வழங்கப்படவிருந்தது. எனினும் இந்த சந்திப்பின் பின்னர் அவருக்கு பதவி பிரமாணம் வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மாடி வீடுகளை கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுக்கு அமைச்சு பதவி கிடைப்பது குறித்து அச்சத்தில் உள்ளனர்.

அதற்கமைய மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள அதே அச்சம் இந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு வருமானத்தை வழங்கிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல் பொன்சேகாவிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

எனினும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சரத் பொன்சேகா என்ற துருப்புச் சீட்டு ரணிலின் கையிலுள்ள வரையில், அவரது பிரதமர் பதவிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.