நீரில் மூழ்கிய ஸ்ரீதேவியால் தப்பமுடியாமற்போனது ஏன்?

நுரையீரல் மூலம் வெளிப்புறக் காற்றைச் சுவாசிக்கும் எந்தவொரு உயிரினமும் நீரில் மூழ்கினால் என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். நீரில் மூழ்குதல் என்பது சாவின் காரணி ஆகாது, மூச்சுக்குளாயின் பாதையை நீர் தடுப்பதுவே சாவுக்கான காரணமாகின்றது.

மனிதர்கள் தம்மால் இயலாமல் போகின்ற சந்தர்ப்பத்திலோ அல்லது சுய நினைவை இழந்திருக்கும் சந்தர்ப்பத்திலோதான் நீரிலிருந்து தமது மூச்சுக்குளாயின் பாதை அடைபடுவதைத் தடுக்கமுடியாமல் உள்ளனர்.

ஒரு மனிதனால் தனது நுரையீரலின் செயற்பாட்டை சற்றுத் தாமதிக்க வைக்கமுடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான். அதனை ’மூச்சு அடக்குதல்’ என அழைக்கின்றனர். ஆனால் நீண்ட நேரம் மூச்சை அடக்குதல் என்பது சாதாரணமாக மனிதர்களால் இயலாத காரியமாகிறது. நன்றாக மூச்சுப் பயிற்சியினை மேற்கொண்ட சிலரால் இது சாத்தியமாகின்றது.

நுரையீரலின் செயற்பாட்டை நாம் சற்று தாமதிக்க வைத்தாலும் உடலின் தேவை கருதி அது தன்னிச்சையாக இயங்கத் துடிக்கும். அந்த நேரத்தில் தான் அது அதிக சக்தியினை இந்த இயக்கத்துக்காக உடலிலிருந்து எடுத்துக்கொள்கிறது. மேலும் உடலுக்கு குருதியின்மூலம் சுத்தமான பிராணவாயு கிடைக்காதபோது நினைவிழப்பு ஏற்படுகின்றது. இதனால் ஒரு மனிதன் அந்த இடத்திலேயே மயக்கமடைந்துவிடுகிறான்.

உண்மையில் இந்த மயக்கம் என்பது உடலானது தானாகவே தன்னைப் பாதுகாப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒரு திடீர் நடவடிக்கை தான். அடக்கப்பட்டிருந்த நுரையீரலின் செயற்பாட்டை இயங்கவைப்பதற்காக மனிதர்களை நினைவிழக்கச் செய்கின்றது உடல்.

ஒரு மனிதன் தண்ணீருள் மூச்சை அடக்கும்போது தன்னால் முடியவில்லை என்ற சமிக்கை கிடைத்ததும் நீர் மேற்பரப்பிற்கு வந்திடவேண்டும். இல்லையேல் துரிதமாக நினைவிழப்பு ஏற்பட்டு மனிதனால் இயங்கமுடியாதளவுக்கு நிலைமை மாறிவிடும். இந்த வேளையில் தனது உயிரைப் பாதுகாக்க உடல் எடுக்கும் கடைசிப் போராட்டமும் மூச்சுக்குளாயின் பாதை அடைக்கப்பட்டிருப்பதால் தோல்வியில் முடிவடைந்துவிடும். ஆழமற்ற நீர்நிலை ஒன்றில்கூட மனிதர்கள் இம்மாதிரியான விபரீத விளையாட்டுக்களைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த விடுதி அறையிலுள்ள தண்ணீர் தொட்டியில் நினைவிழந்து விழுந்தமையால் ஏற்பட்ட சுவாசத் தடையின் பின்னர்தான் உயிரிழந்திருக்கிறார் என மருத்துவ அறிக்கை கூறியுள்ளது. அவ்வாறாயின் அவர் நினைவிழந்து தண்ணீரில் மூழ்கியபோதும் அவரால் சுவாசிக்க முடிந்திருக்கும், இதயம் தடையின்றி துடித்திருக்கும். ஆனால் நினைவிழப்பு என்பது தன்னிச்சையாகச் செயற்படும் நுரையீரலையும் இதயத் துடிப்பையும் கவனத்திலெடுக்காது.

நீரில் மூழ்கியபோதும் ஸ்ரீதேவியின் நுரையீரல் இயங்கிக்கொண்டிருந்தமையால் சுவாசப்பை சிற்றறையெங்கும் தண்ணீர் புகுந்து சுவாசிப்பதைத் தடுத்திருக்கும். இதனால் சுய நினைவிழப்பின் பின்னரும் வாழ்ந்திருக்கவேண்டிய ஸ்ரீதேவி பரிதாபகரமாக உயிரினை இழக்க நேரிட்டமை சோகமே!