பல்லி என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு பிராணியாகும். வேட்டை விலங்குகள் என்ற அடிப்படையில் பார்த்தால் பல்லியும் ஒரு சிறந்த வேட்டைக்காரன் தான்.இத்தகைய பல்லி நமது வீடுகளில் சாதாரணமாக வாழ்கின்ற ஒரு உயிரினமாகும். வீடுகளின் சுவர் இடுக்குகள் மற்றும் கூரைச் சட்டங்கள் என பரந்து வாழ்கின்றது. பல்லிகள் தமக்கிடையே தொடர்பாடலைப் பேணுவதற்காகவே கத்துகின்றன. அதுதவிர பசி ஏற்படுகின்ற சமயம் பல்லி கத்துகின்றது.
பல்லி ’இச் இச் இச் இச்’ என்று கத்துமாயின் அது “சொல்லுதல்” என்ற மரபுத் தொடரால் குறிக்கப்படுகின்றது. இதுதான் பல்லியின் சமிக்கை ஒலியாகும். இதனை வைத்துத்தான் பல்லி தனது உறவுகளுடன் தொடர்பினைப் பரிமாறுகிறது. குறிப்பாக தனது இணையினை அழைப்பதாகவும் எச்சரிப்பதாகவும் இந்த ஒலியினை அது பயன்படுத்துகின்றது. தனிமையான அறை ஒன்றினுள் நாம் சில சமயம் உள் நுழையும்போது உடனே பல்லி எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்துகின்றது. அந்த எச்சரிக்கை ஒலியினைப் பெற்றுக்கொண்ட ஏனைய பல்லிகள் உசாராகிவிடும்.அதேபோல், சில சமயம் நாங்கள் வெளியில் செல்கின்ற சமயத்தில்கூட பல்லி சொல்லியிருக்கலாம். அதுவும் ஒரு தொடர்பாடல் பரிமாற்றமாகத்தான் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.ஆனாலும், பல்லி சொல்வது குறித்து எமது தமிழர்களிடையே பல்வேறுபட்ட நம்பிக்கைகள் இருக்கின்றது. உச்சத்துப் பல்லி அச்சமில்லை என்ற பழமொழிகூட தொன்று தொட்ட வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.நாம் வெளியே செல்லும்போது பல்லி சொன்னால் கெட்ட சகுனம் என்று பார்க்கப்படுகிரது. அதனால் சற்று நேரம் தாமதித்துவிட்டுச் செல்லுமாறு எமது பெரியவர்கள் சொல்வார்கள்.
இதேவேளை பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால் மனிதர்கள் இறப்பார்களா என்ற கேள்வியொன்று அண்மையில் கேட்கப்பட்டிருந்தது. உண்மையில் இறப்பு நேருமா? வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுமா? உண்மையாகவே உடல்நல பாதிப்பால் வாந்தி, மயக்கம் ஏற்படுவதைவிட, பயத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கமே அதிகமாக இருக்கும். இதனால்தான் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வருவதைப் பார்க்கிறோம்.
பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும் வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்துகிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்கும், அது பற்றிக் கேட்டவருக்கும் பயம் தொற்றும். இதனால் ஏற்படும் அருவருப்பாலும், பல்லி பற்றிய மரண பயத்தாலும், பதற்றத்தாலும்தான் வாந்தி ஏற்படுகிறது. ஆகவே, பல்லி பற்றிய பயத்தினை நாங்கள் தாராளமாகவே விட்டுவிட்டு நமது வேலைகளைத் தொடரலாம்!