போதை இளைஞர்களின் வெறிச்செயல்! – போலீஸ் ஏட்டுக்கு நடந்த கொடூரம்!

சென்னையில், நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரின் கார் டிரைவரை குடிபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர், நாகராஜன். இவரது கார் டிரைவர், போலீஸ் ஏட்டு பாலமுருகன். போலீஸ் வாகனத்தில் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார் இன்ஸ்பெக்டர் நாகராஜன் . போலீஸ் ஜீப்பை ஏட்டு பாலமுருகன் ஓட்டினார். அப்போது, விருகம்பாக்கம், ஆற்காடு சாலை அருகே சொகுசு கார் ஒன்று நின்றது. அந்தக் காரின் அருகே, மூன்று இளைஞர்கள் குடிபோதையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைக் கலைந்துசெல்லும்படி ரோந்து போலீஸார் தெரிவித்தனர்.  போலீஸ் ஏட்டு பாலமுருகனுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இளைஞர்கள், போலீஸ் ஏட்டு பாலமுருகனை கடுமையாகத் தாக்கினர். இதில், அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக போலீஸார், அவரை மீட்டனர். அதோடு, மூன்று இளைஞர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அவர்களது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் ஏட்டுவைத் தாக்கியவர்கள்

விசாரணையில், போலீஸ் ஏட்டை தாக்கியது, நீலாங்கரையைச் சேர்ந்த கார்த்திக், அடையாறு  இந்திரா நகரைச் சேர்ந்த கரிகால்சோழன், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்று தெரியவந்தது. இதையடுத்து, மூன்று இளைஞர்களையும் விடுவிக்குமாறு போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து பிரஷர் வந்தது. சாதாரண பிரிவின்கீழ் வழக்குப்பதிவுசெய்து, அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர். சொகுசு காரில் அந்த இளைஞர்கள் பந்தாவாக புறப்பட்டுச்சென்றனர். இளைஞர்களால் தாக்கப்பட்ட போலீஸ்  ஏட்டு பாலமுருகனுக்கு, முதலுதவி அளிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மூன்று இளைஞர்களை விடுவிக்க உயரதிகாரிகளிடமிருந்து போன் வந்ததும், அவர்கள் விடுவிக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. சாதாரண நிலையில் உள்ள போலீஸாரைத் தாக்கிய அவர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபாரிசு இல்லையென்றால், அந்த மூன்று பேர்மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். மூன்று இளைஞர்களில் ஒருவர், வி.வி.ஐ.பி ஒருவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்” என்றனர்.