பிறந்த கிழமையும், அதிர்ஷ்டமும்.. பலன்களும்…

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் குணநலன்களை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

அதேநேரத்தில் அவர்களின் வாழ்வில் அதிர்ஷ்ட பலன்களை பெற பிறந்த கிழமையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஜோதிடம் கூறுகிறது.

ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமை அன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். உதவு மற்றும் இயல்பான தலைமை பண்புகளை கொண்ட இவர்கள் யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் நடத்துக் கொள்வார்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

ஞாயிறன்று அதிகாலையில் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும்.

ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். இவர்களுக்கு கிழக்கு திசையானது நல்ல பலன் தருவதாக அமையும்.

திங்கள் கிழமை

திங்கள் கிழமை பிறந்தவர்கள் வேடிக்கையான பேச்சோடு, பல விடயங்கள் அறிந்தவர்களாகவும், சாந்தம், சகிப்புத் தன்மை, மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களில் சிறந்தவராக இருப்பார்கள்.

இவர்களுக்கு சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். அதனால் பழைய விடயங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டு கவலை அடைவார்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

திங்கள் கிழமை அன்று அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்திய படைக்க வேண்டும்.

சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும்.

செவ்வாய் கிழமை

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள்.

இவர்கள் தனது அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள்.

அதனால் இவர்கள் பலரது வெறுப்பை சம்பாதித்துக் கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்பும், வெறுப்பும் அதிகம் உள்ளவராக இருப்பார்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

செவ்வாய்க் கிழமையில் அதிகாலை அரளிப்பூ மாலை கொண்டு முருகப் பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம் பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

இவர்கள் சிவப்பு, மஞ்சள் இருக்குமாறு உள்ள ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட பலனை கொடுக்கும்.

புதன் கிழமை

புதன் கிழமையில் பிறந்தவர்கள் அறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள்.

இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருப்பார்கள். மற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தனது செயல்களை வரையறுத்துக் கொள்ளும் மனநிலை கொண்டவராக இருப்பார்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

புதன் கிழமையில் அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

இவர்கள் பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்களில் ஆடைகள் அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

வியாழன் கிழமை

வியாழன் கிழமையில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவராக இருப்பார்கள்.

தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் கொண இவர்கள், உதவி, உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

வியாழன் கிழமையில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இவர்கள் தங்க நிறம் கொண்ட ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

வெள்ளிக் கிழமை

வெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் சுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள்.

இவர்கள் பொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு கொண்டவராக இருப்பார்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

வெள்ளிக் கிழமையில் அதிகாலை மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம்.

இவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும்.

சனிக் கிழமை

சனிக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத் தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள்.

பிறருடைய கஷ்டங்களை இவர்களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தனது பாதையில் தொடர்ந்து நடக்கும் குணத்தை கொண்டவர்கள்.

அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

சனிக் கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது.

இவர்கள் நீலம் சார்ந்த நிறங்களில் ஆடைகள் அணிந்தால் அதிர்ஷ்ட பலன்களை பெறலாம்.