சிலருக்கு உடைகள் உடலோடு இணைந்திருப்பது பிடிக்கும், சிலருக்கு உடைகள் தொளதொளவென்று, உடலுக்கும் உடைக்கும் ஒரு மைல் தூரம் போன்ற வகையில் தைக்கப்பட்ட உடைகள் என்றால் மிகவும் இஷ்டமாக இருக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஆடைகள் என்பது நல்ல மொடமொடப்புடன் உட்கார்ந்தால் உடைந்துவிடும் அளவுக்கு, ஸ்டிஃபாக காணப்படும் காட்டன் உடைகள் மட்டுமே உடுத்தப்பிடிக்கும். சில பெண்களும், மொடமொடவென இருக்கும் பருத்தியிலான புடவைகளையே அதிகம் விரும்புவார்கள்.
ஆடைகளின் மொடமொடப்பில் ஒரு கம்பீரம், தோற்றப்பொலிவு அதிகரித்து, தங்களின் மனநிலையை அந்த ஆடைகள் உற்சாகப்படுத்துகின்றன என்கிறார்கள்.
சில காலம் முன்பு வரை, துணிகளை சலவை செய்யும் பணியாளர்கள், வீடுகளில் வந்து துணிகளைப் பெற்றுச் செல்லும்போது, காட்டன் சட்டைகள் மற்றும் புடவைகளுக்கு கஞ்சி சலவை செய்யவேண்டுமா, என்பார்கள், விருப்பம் இருப்பவர்கள் சரி என்பார்கள்.
காட்டன் புடவைகள் :
இக்காலங்களில், அரிசியை கஞ்சி வைக்காமலேயே, சாதம் வடித்து விடுகிறார்கள், சலவைத் தொழில் இப்போது சுருங்கி வேறு வடிவம் எடுத்து, வாஷிங் மெஷின்களிலேயே, துணிகளின் நீராடலை முடித்துக் கொள்கிறது, இதில் யாருக்கும் கஞ்சி போட்டு துணிகளை வெளுக்க நேரமுமில்லை, விருப்பமுமில்லை.
இருந்தாலும், மொடமொடப்பாக துணிகளை உடுத்திப் பழகியவர்கள், எங்கு பழைய முறைகளில் துணிகளை சலவை செய்வார்கள் என்று தேடி வருவார்கள்.
நவீன வளர்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், நகரங்களில் அத்தகைய தேடுதல்கள் கால விரயம்தான், எனவே, நாமே களத்தில் இறங்கி, விரும்பிய காட்டன் ஆடைகளை, வீடுகளில் நாமே கஞ்சி போட்டு சலவை செய்து கொள்ளலாம். எப்படி துணிகளுக்கு கஞ்சி போட்டு அவற்றை மொடமொடப்பாக்குவது என்று பார்க்கலாம்.
புடவைக் கஞ்சி :
முதலில், முக்கியத் தேவையான கஞ்சியை தயாரித்துக் கொள்வோம். இதற்கெல்லாம், தற்காலத்தில் மார்க்கெட்டில் செயற்கைப் பொருட்கள் வந்துவிட்டாலும் கூட, வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்துவிடுவது எளிதானது. வீடுகளில் இன்றும் சாதத்தை கஞ்சி வைத்துதான், வடிக்கிறீர்கள் என்றால், அந்தக் கஞ்சியே போதும், இல்லையென்றால், சிறிது ஜவ்வரிசி மாவு அல்லது அரிசி மாவு கூட எடுத்துக்கொள்ளலாம்.
மாவை நன்கு தண்ணீர் விட்டு, அதை சூடு பண்ண வேண்டும், கஞ்சி போன்ற குழைவானப் பதம் வந்ததும் நீரை மட்டும் தனியே வடிகட்டி, எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
உடைகளுக்கு கஞ்சி போடும் இடம் :
இனி, உடைகளுக்கு கஞ்சி போடும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், வீடுகளில் சற்றே நிழல் உள்ள மொட்டை மாடிகள் இருந்தால் மிக்க நலம், இல்லையெனில் துணிகள் காயப்போடும் இடங்களில் இந்த முறையைச் செய்ய நலமாகும்.
மொட்டை மாடியில் ஒரு பக்கெட்டில், அரை பக்கெட் அளவு நீர் ஊற்றி, அதில் கால் கப் கஞ்சியைக் கலந்து, நனைக்க வேண்டிய புடவையை முழுவதும் நனையும் படி விரித்து அதை மெதுவாக நீரில் முக்கி எடுக்க வேண்டும், தண்ணீர் புடவையில் அதிகம் இருந்தாலும், அதிகம் பிழிந்துவிடாமல் அப்படியே, கொடியில் உலர்த்த வேண்டும்.
தண்ணீர் வற்றியதும், புடவையை சுருக்கம் இல்லாமல் நன்கு மடித்து, மீண்டும் ஒருமுறை, உலர வைத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோல, தேவைப்படும் ஆடைகளுக்கு செய்து வரலாம். பக்கெட்டில் நீர் தீர்ந்து விட்டது எனில், மீண்டும் பழைய அளவில், நீரில் கஞ்சியைக் கலந்து வைத்துக் கொள்ளலாம்
கவனிக்க வேண்டியவை:
கஞ்சியில் தோய்க்கும் உடைகள் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும், ஈரமாக இருக்கக்கூடாது, சாயம் போகும் புடவைகளை இறுதியாக கஞ்சியில் தோய்க்க வேண்டும். கஞ்சியில் ஓரிரு துளி மரிக்கொழுந்து ஆயில் அல்லது லாவண்டர் ஆயில் கலந்து நிழலில் உலர்ந்தபின், கடைகளில் சலவை செய்து உடுத்த, சிறந்த நறுமணத்துடன் புதிய ஆடைகள் போன்ற தோற்றப்பொலிவில் திகழும்.
இதேபோல, பெண்களுக்கு மேலும் ஒரு மன உளைச்சலைத் தரும் விஷயம், திருமணப் பட்டுப் புடவைகள் மற்றும் பட்டு வேட்டிகளை பாதுகாப்பது எப்படி என்றுதான்.
பட்டுப்புடவைகளை என்னதான், பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவை சமயத்தில் பூஞ்சைப் பிடித்து பாதிப்பு வரலாம். அது போன்ற பாதிப்புகளைக் களைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
பட்டுப்புடவைகளை சுத்தம் செய்யும் முறை :
- நெடுநாட்களாக பெட்டிகளில் கிடக்கும் பட்டுப்புடவைகளை எடுத்து, துவைத்து சலவை செய்து, மீண்டும் பெட்டிகளில் வைத்து வந்தால், சில ஆண்டு காலத்திற்கு, புடவைகளில் எந்த பாதிப்பும் வராது.
- மணிப்பூவந்தி எனும் பூந்திக்கொட்டைக் காய்களை சற்று அரைத்து நீரில் இட, தண்ணீர் நுரைத்து இருக்கும், அதில் பட்டுப்புடவைகளை நன்கு அமிழ்த்தி எடுக்கக் வேண்டும், புடவைகளில் ஏதேனும் கரைகள் இருந்தாலும், அதை மென்மையாக கைகளால் நன்கு அலசி வர, கரைகள் நீங்கி விடும். பின்னர் சாதாரண நீரில் ஒரு முறை புடவையை அலசி, நிழலில் உலர்த்த வேண்டும்.
- நன்கு உலர்ந்த பின்னர் ட்ரை வாஷ் செய்து வைத்துக் கொள்ள, புடவையை நெடுநாட்கள் பாதுகாத்து வரலாம். பட்டுப் புடவையும், புதிய புடவை போலாகிவிடும்.